Published : 03 Jul 2020 05:26 PM
Last Updated : 03 Jul 2020 05:26 PM
ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பதில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது நாட்டின் பொருளாதாரச் சுயசார்பை தகர்த்துவிடும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூலை 3) வெளியிட்ட அறிக்கை:
"உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே மத்திய பாஜக அரசால் சிதைத்து , அழிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரச் சுயசார்பைக் கட்டமைத்ததில் ரயில்வே துறைக்கு மிக முக்கியப் பங்குண்டு. பொருள் போக்குவரத்தில் ரயில்வே முதன்மை இடம் வகித்து வருகிறது. பயணிகள் ரயில்களில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர் .
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பதில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 109 ரயில்வே வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் இயக்க அனுமதி வழங்கப்படும் என இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரச் சுயசார்பை தகர்த்துவிடும் அபாயகரமான செயலாகும். ஏற்கெனவே பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரயில்வேக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொருள் போக்குவரத்தில் தனியார் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது ரயில் வழித்தடங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இது தொடரும் எனில், பாரம்பரிய பெருமை வாய்ந்த இந்திய ரயில்வே முழுமையாக தனியார் வசம் சென்றுவிடும். இதனால் சாதாரண மக்களுக்கு ரயில் பயணம் எட்டாத உயரத்துக்குச் சென்று விடும்.
விமானம் மற்றும் பேருந்துக் கட்டணங்களை அடிப்படையாகக் கொண்டு தனியார் ரயில்களில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த குடிமக்கள், நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள், விளையாட்டு வீரர்கள், கலைத்துறையினர், மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கிடைத்து வரும் சலுகைக் கட்டணங்கள் அனைத்தும் ரத்தாகி விடும். பல தரப்பிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ரயில்வே வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்க அனுமதிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் ரயில்வே வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய அரசையும், பிரதமரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT