Published : 03 Jul 2020 05:03 PM
Last Updated : 03 Jul 2020 05:03 PM
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 3) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும், கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதிகமான பரிசோதனைகள் செய்தால்தான் யார் யாருக்கு தொற்று உள்ளது என்று கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
ஜிப்மரில் சுமார் 1,000 பேருக்குப் பரிசோதனை செய்வதற்கான உபகரணங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரியிலும் சுமார் 400 பேர் அளவுக்குப் பரிசோதனை செய்ய முடியும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் பரிசோதனை செய்வதற்காக நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவக் குழுவினர் அனுப்பப்படுகின்றனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியில் பிம்ஸ், மகாத்மா காந்தி, அறுபடை வீடு, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் கரோனா பரிசோதனை செய்ய மையங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.
அதுமட்டுமல்லாமல், வில்லியனூர் மற்றும் கரிக்கலாம்பாக்கத்திலும் உமிழ்நீர் பரிசோதனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல், காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலும் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரி மாநிலம் முழுவதும் 'ஆர்சனிக் ஆல்பம்' மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன.
காரைக்கால் பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்ய முடிவு செய்து, ஒரு வாரத்துக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். அங்குள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியிலும் ஒரு மையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். உமிழ்நீர் பரிசோதனை மையங்களை அதிகப்படுத்துவதன் மூலம் பரிசோதனையை அதிகப்படுத்த முடியும்.
அதற்காக அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரியிலும் அதிகப்படியான பரிசோதனைகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளோம். புதுச்சேரியைப்போல் காரைக்கால் கிராமப்பகுதியிலும் நடமாடும் வாகனம் மூலம் சென்று உமிழ்நீர் பரிசோதனைப் பணியைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்திரா காந்தி, ஜிப்மரில் நிறைய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அரசோடு ஒத்துழைக்க வேண்டும். தேவையான படுக்கைகளை வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி பொறுப்பாளர்களிடம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியுள்ளார். அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
கிராமப்புறங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவக்குழுவினர் வரும்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது. பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புதுச்சேரி பகுதியைப் போல் காரைக்கால் பகுதியிலும் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் சென்று தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. கடைகளின் உரிமையாளர்கள், பொருட்கள் வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா? தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா? என்று பார்க்க வேண்டுமே தவிர கடைகளுக்குச் சீல் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசு உத்தரவுகளை மீறும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளுக்குச் சீல் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மத்திய அரசு 109 ரயில் தடத்தில் ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. ஏற்கெனவே விமானச் சேவை, பேருந்துச் சேவைகள் தனியாரிடம் சென்றுவிட்டன.
அரசுப் பேருந்துகள் குறைவாக உள்ளன. ரயில் பயணம் என்பது ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து. பொதுத்துறையில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தால் குறைந்த கட்டணத்தில் மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயில் கட்டணம் குறைவாக இருக்கும் காரணத்தினால் புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு ரூ.600 கட்டணத்தில் சென்றுவிடலாம்.
சாதாரண மக்கள், வறுமைக் கேட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் ரயில் சேவை மூலம் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்பை நாம் உருவாக்கியுள்ளோம். நேரு காலத்தில் இருந்து ரயில் சேவை பொதுத்துறையில் இருந்து மக்களுக்குச் சேவை புரிந்து வருகிறது. ஆனால், தனியார் மயமாக்குவதன் மூலமாக ரயில் பயணம் மிக அதிகப்படியான தொகையைக் கொடுத்து மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கெனவே விமானச் சேவை தனியாரிடம் சென்றதனால் விமானக் கட்டணம் அதிகமாக உள்ளது. பொதுத்துறையோடு அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகப்படியான தொகையைப் பயணிகளிடம் வசூலிக்கின்றனர். ஆனால், ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைத்தால் பாதிப்பு ஏற்படுமே தவிர, மக்களுக்கு எந்தவிதப் பயனும் கிடையாது.
தனியார் துறையினர் லாபம் சம்பாதிக்க நினைப்பார்கள். ஆகவே, அதனுடைய சுமை மக்கள் மத்தியில் சென்று சேரும். ரயில்வே துறை பொதுத்துறையில் இருந்தால்தான் சாதாரண, நடுத்தர மக்கள் பயணம் செய்ய முடியும். ஆகவே, மத்திய அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். அவர்கள் உடனடியாக தங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, வியாபாரிகள் விதிமுறைகளைக் கடைப்பிடித்து மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அப்படி வியாபரிகள் கடைப்பிடிக்கவில்லை என்றால் அரசு தங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT