Published : 03 Jul 2020 03:44 PM
Last Updated : 03 Jul 2020 03:44 PM

12 யானைகள் மரணம் எளிதில் கடந்து செல்லும் நிகழ்வல்ல: அமைச்சர் மவுனமாக இருப்பது ஏன்?- தங்கம் தென்னரசு கேள்வி

12 யானைகள் பத்து நாட்களுக்குள் இறந்தும் ஏன் இன்னும் உரிய மேல்மட்ட விசாரணைக்கு அமைச்சர் உத்தரவிடவில்லை, 1972 ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டதின் பட்டியல் கீழ் யானை பாதுகாக்கப்பட்ட உயிரினம் இல்லையா, தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் என்ன செய்து கொண்டிருக்கின்றார்? என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசுவின் முகநூல் பதிவு:

“கரோனா கொடுந்தொற்றின் ஊடே ஓசை ஏதுமின்றி கோயம்புத்தூர் வனக் கோட்டப் பகுதியில் கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன.

கடந்த 10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 யானைகள் அங்கே இறந்திருக்கின்றன. ஒவ்வொரு மரணத்தின் காரணமும் அது நடை பெற்ற சூழலைப் பொறுத்து இயற்கையாகவோ அன்றித் திட்டமிட்ட படுகொலையாகவோ அல்லது வேட்டையாகவோ இருக்கக் கூடும்.

ஆனால், ஒரே ஒரு யானையின் மரணமே பல்லுயிர்ச் சூழலில் தாங்கொணாத் தாக்கத்தையும், அளப்பரிய சேதத்தையும் விளைவிக்கக்கூடிய நிலையில், பத்து நாட்களுக்குள்ளாக பன்னிரெண்டு யானைகள் ஒரே வனக் கோட்டத்தில் மரணம் என்பது எளிதாகக் கடந்து போகும் செய்தி அல்ல.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் போட்ஸ்வானா நாட்டில் கொத்துக் கொத்தாக யானைகள் மாண்டுள்ள செய்தி கேட்டு அந்நாட்டு அரசு மட்டுமல்ல; உலகமே அதிர்ச்சியில் இன்று உறைந்து போயிருக்கின்றது.

ஆனால், தமிழகத்தில் நம் கண்ணெதிரே இன்றைக்கு இத்தனை யானைகள் மாண்டு மடிந்தும் தமிழக அரசு இப்போது வரை “யாருக்கு வந்த விருந்தோ” என்ற மனப்பான்மையில் வாளாயிருப்பது ஏன்?

மனித இனம், விலங்கினம் மற்றும் தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கு முக்கியமான சூழல் சமநிலை மற்றும் வளிமண்டல சமன்பாட்டுடன் கூடிய சூழலமைப்பை நிலை நிறுத்தி பராமரிப்பது நமது தமிழகவனத்துறையின் கொள்கை என்று சொல்லிக்கொள்வதில் என்ன பொருள்?

1972 ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டதின் பட்டியல் கீழ் யானை பாதுகாக்கப்பட்ட உயிரினம் இல்லையா? தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் என்ன செய்து கொண்டிருக்கின்றார்? இத்தனை யானைகள் பத்து நாட்களுக்குள் இறந்தும் ஏன் இன்னும் உரிய மேல்மட்ட விசாரணைக்கு அவர் உத்தரவிடவில்லை?

தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொண்டு இருக்கின்றார்கள்? ஏன் இந்த மெளனம்? ஏன் இந்தத் தயக்கம்? யானைகளின் உயிரென்பதென்ன அவ்வளவு மலிவா?

என்ன செய்வது? நாட்டிலே மனித உயிர்கள் அடித்துக் கொல்லப்பட்ட போதே அவர்கள் மூச்சுத்திணறி இறந்ததாகச் சொன்ன இந்த அரசிடம் தான், காட்டிலே தங்கள் வாழிடத்திலேயே கேட்பாரற்று வாயில்லாக் காட்டுயிர்கள் பலியாவதற்கும் நியாயம் கேட்க வேண்டி இருக்கின்றது“.

இவ்வாறு தங்கம் தென்னரசு வேதனை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x