Published : 03 Jul 2020 01:24 PM
Last Updated : 03 Jul 2020 01:24 PM
தமிழக பாஜக நிர்வாகிகள், அணி நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கும் நடிகைகள் நமிதா, கவுதமி உள்ளிட்டோருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டு வந்த நிலையில் அவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பாஜக மாநிலத் தலைவர் நியமனம் இல்லாமலேயே பல மாதங்கள் சென்றன. இந்நிலையில் யாரும் எதிர்பாராவண்ணம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
பாஜக தலைவர் நியமிக்கப்பட்டபின் பாஜகவின் அனைத்துப் பதவிகளுக்கும் நியமன அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இதில் பல மாற்றங்கள் வந்துள்ளன.
மாநில பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் நீக்கப்பட்டு மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனும் மாநில துணைத் தலைவர் பதவியில் நீடிக்கிறார்.
மாநில துணைத் தலைவர்களாக எம்.சக்ரவர்த்தி, நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, கே.எஸ்.நரேந்திரன், வானதி சீனிவாசன், முருகானந்தம், எம்.என்.ராஜா, மஹாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக்கவிதாசன் உள்ளிட்ட 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில பொதுச் செயலாளர்களாக கே.டி.ராகவன், ஜி.கே.செல்வகுமார், சீனிவாசன், கரு.நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலச் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலப் பொருளாளராக எஸ்.ஆர்.சேகரும், இணைப் பொருளாளராக சிவ சுப்ரமணியமும், அலுவலகச் செயலாளராக எம்.சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் நமிதா, கவுதமி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில இளைஞரணித் தலைவராக வினோஜ் பன்னீர் செல்வமும், மகளிரணித் தலைவராக மீனாட்சியும், வழக்கறிஞர் அணித் தலைவராக புதிதாகக் கட்சியில் இணைந்த பால் கனகராஜும், இலக்கிய அணித் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் என 25 பிரிவுகளுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 29 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில செய்தித் தொடர்பாளர்கள் 8 பேர், மாவட்டப் பார்வையாளர்கள் 60 பேர், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் 78 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT