Published : 03 Jul 2020 01:16 PM
Last Updated : 03 Jul 2020 01:16 PM
காவல்துறையினருக்கு எதிரான புகார்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல்களின்படி, காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்படாததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை சித்ரவதை, லாக்கப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிரான புகார்களைக் கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பிரகாஷ் சிங் என்பவரின் வழக்கை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அதன்படி, காவல்துறையினருக்கு எதிராகப் புகார் அளிக்க மாநில அளவில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான புகார் ஆணையமும், மாவட்ட அளவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான புகார் ஆணையமும் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் காவல்துறை சீர்திருத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிரான புகார்களை அளிக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.
மாறாக, மாநில அளவிலான புகார் ஆணையத்திற்கு உள்துறைச் செயலாளர் தலைமையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
மாவட்ட அளவிலான புகார் ஆணையத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட காவல்துறை சீர்திருத்த அவசரச் சட்ட விதிகளை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 3) நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் சாத்தான்குளம் சம்பவம் போல் மேலும் நடைபெறாமல் இருக்க உச்ச நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல்களின்படி காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இதே கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT