Published : 03 Jul 2020 12:56 PM
Last Updated : 03 Jul 2020 12:56 PM
இயற்கை முறையில் துவைத்துப் பயன்படுத்தும் குழந்தை டயப்பர்கள் கோவையில் தயாராகி வருகின்றன.
குழந்தைகள் இருக்கும் வீடுகளில், அவர்களுக்குப் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுள் ஒன்றாக டயப்பர் மாறிவிட்டது. துணி, உள்ளாடைகளை அணிவித்தாலும் அடிக்கடி குழந்தைகள் சிறுநீர் கழிப்பதால் நனைந்து விடும். ஈரத்தால் குழந்தைகளின் உறக்கம் பாதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் சளி பிடித்து, அதனால் காய்ச்சல்கூட ஏற்பட்டுவிடும். இதற்குத் தீர்வாக டயப்பர்களைப் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் இவ்வகைப் பொருட்கள் எளிதில் மக்குவது இல்லை. நெகிழிகளைப் போல் நீண்ட நாட்களுக்கு மண்ணிலேயே கிடக்கும். குப்பையிலும், கால்வாயிலும் நிரம்பி வழியும் கழிவுகளில் டயப்பர்களும் அதிகம். இதனால் மண் மட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
இதற்கு ஒரே மாற்று மீண்டும் துணிகளைப் பயன்படுத்துவதுதான் என்றாலும் நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில், துணி டயப்பர்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய துணியால் ஆன, துவைத்துப் பயன்படுத்தக்கூடிய 'டயப்பர்'களை உற்பத்தி செய்து வருகிறார். கோவையைச் சேர்ந்த இளம் பெண் தொழில்முனைவோர் இஷானா.
இது குறித்து இஷானா கூறியதாவது:
“மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும், துணியால் ஆன துவைத்துப் பயன்படுத்தக் கூடிய எங்களுடைய தயாரிப்பான 'துணி நாப்கின்'களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. வாடிக்கையாளர்கள் பலர் குழந்தைகளுக்கான 'டயப்பர்'களைத் தயாரித்துக் கொடுக்குமாறு கேட்டனர்.
முதலில் அவற்றுக்கான வடிவமைப்பை உருவாக்கினோம். பின்னர் 3 அடுக்குகளைக் (லேயர்களை) கொண்டு டயப்பர்களைத் தயாரித்தோம். ஃபிளேனல் ஃபேப்ரிக்ஸ், டர்க்கி, காட்டன் லீக் புரூஃப் ஆகிய மூலப்பொருட்களைக் கொண்டு 3 டயப்பர்களை உருவாக்கினோம். எதிர்பார்த்ததைப் போல் நன்றாகவே அமைந்தது. முதலில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாம்பிள் கொடுத்தோம்.
அதைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்தியவர்கள், அதன் பயன்பாடு நன்றாகவே இருப்பதாகத் தெரிவிக்க உற்பத்தியை அதிகரித்தோம். துவைத்துச் சுத்தமாகப் பராமரித்துப் பயன்படுத்தத்தக்க இந்த டயப்பரை 50 தடவை வரை பயன்படுத்தலாம். அதன் பின்னர் தூக்கி எறிந்தாலும் மண்ணில் எளிதாக மக்கிவிடும். மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆர்வம் உள்ளவர்களுக்கு இவற்றைத் தயாரிப்பதற்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறோம். தற்போது 25 பெண் தையல் கலைஞர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தவாறு எங்களுக்கு 'டயப்பர்கள் தயாரித்துக் கொடுப்பதன் மூலம் வருமானம் ஈட்டி, தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT