Published : 03 Jul 2020 12:41 PM
Last Updated : 03 Jul 2020 12:41 PM

இதுவரை 56,021 பேரை குணப்படுத்தியுள்ளோம்; அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

சென்னை

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (ஜூலை 3) அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கென பிரத்யேகமாக 400 படுக்கைகள் உள்ளன. இது 800 படுக்கைகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனை 1,600 படுக்கைகளாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவை தீவிர சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.

நேற்று (ஜூலை 2) வரை தமிழகத்தில் 56,021 பேரை குணப்படுத்தியிருக்கிறோம். இது மிக முக்கியமானது. அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மாவட்ட மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதியை மேம்படுத்த ரூ.75 கோடி ஒதுக்கி முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

ஆக்சிஜன் பைப்லைன் அமைக்கும் பணி போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் 40 கிலோ லிட்டர் திறனுள்ள ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு வருகிறது. அதனை திரவநிலை ஆக்சிஜனாகக் கொடுக்கிறோம். அப்படிக் கொடுக்கும்போது 1 லிட்டர் திரவ ஆக்சிஜன், 800 லிட்டர் வாயு நிலையிலுள்ள ஆக்சிஜனாக மாறும். ஆக்சிஜன் வசதி உட்பட படுக்கை வசதி என அனைத்து வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தி வருகிறோம்".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x