Published : 03 Jul 2020 12:08 PM
Last Updated : 03 Jul 2020 12:08 PM
பொதுமக்கள் கரோனா காலத்தில் தங்கள் புகாரை காவல் ஆணையரிடம் நேரடியாகத் தெரிவிக்க இயலாத நிலையில், வீடியோ காலில் காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்க வாரத்தில் 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 1-ம் தேதி மாற்றப்பட்டார். புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பின்போது அளித்த பேட்டியில், பொதுமக்கள் சந்திக்க வராத நிலையில் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வீடியோ காலில் பேச ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“சென்னை பெருநகரில் கரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளைக் காவல் ஆணையாளரை நேரடியாகச் சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற கட் செவி (Whats App) எண்ணில் காணொலி மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை புகார் தெரிவித்துப் பயனடையலாம்.
அதன்படி, இன்று (03.07.2020) வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மேற்கண்ட கட்செவி (WhatsApp) எண்ணில் காணொலி மூலம் காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. பொதுமக்கள் காணொலி மூலம் புகார் தெரிவித்துப் பயனடையும் படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது”.
காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT