Published : 03 Jul 2020 10:09 AM
Last Updated : 03 Jul 2020 10:09 AM
சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்பவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை தரவேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 3) வெளியிட்ட அறிக்கை:
"புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ஏம்பல் கிராமத்தில் விளையாடிக்கொண்டு இருந்த ஏழு வயதுச் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கழுத்தறுத்துக் கொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் மனதில் ரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஈவு இரக்கமற்ற செயலை செய்த கொடூரமான குற்றவாளிகளைக் கைது செய்தால் மட்டும் போதாது. சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் விசாரணையைத் துரிதமாக முடிக்க வேண்டும். இதுபோன்ற கொடூரமான செயல்கள், பல மாவட்டங்களிலும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. வயதுப் பாகுபாடே இல்லாமல் அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சமூகம்தான் இப்பொழுது உருவாகிக்கொண்டு வருகின்றது. இது மிகவும் வருந்தத்தக்கது. இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் சட்டங்களையும் தண்டனைகளையும் மேலும் கடுமையாக்க வேண்டும்.
இதுபோன்று சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் கீழ்த்தரமான கொடூரமான மிருகத்தனமான எண்ணங்கள், யாருக்கும் கனவில் கூட வராமல் இருக்க வேண்டுமென்றால், இந்த வழக்கின் தீர்ப்பே தவறு செய்பவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும். இதுபோன்ற இழிவான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு விசாரணையைக் காலதாமதம் இல்லாமல் துரிதப்படுத்தி, அந்தக் கயவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
சிறுமியை இழந்த வாடும் பெற்றோர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
இது முதல் நிகழ்வு அல்ல . மீண்டும் மீண்டும் இது போன்ற சம்பவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .குற்றவாளிகள் மாறி கொண்டேயிருக்கிறார்களே தவிர குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதை தடுப்பதில் குற்றவாளிகளிடம் நாம் எல்லோரும் தோற்று கொண்டிருக்கிறோம் . குழந்தைகள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டுமானால் அவர்களை சுற்றி வட்டமிடும் மனித வல்லூறுகளிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும் . குழந்தைகள் மீதான வன்முறையினை தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு.
0
0
Reply