Published : 22 Sep 2015 12:25 PM
Last Updated : 22 Sep 2015 12:25 PM
டெல்லியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் எதிரொலியாக அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத் துறை நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் சுகாதாரத் துறை மூலம் டெங்கு ஒழிப்பு ‘ஆப்ரேஷன்’ தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார இணை இயக்குநர் தலைமையிலும், மாநகராட்சி பகுதியில் நகர்நல அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினரும், ஒன்றியத்துக்கு ஒரு மருத்துவர் தலைமையில் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு, டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இக்குழுவினர் தலைமையிலான ஊழியர்கள் வீடுகளில் உள்ள தொட்டி, கிணறு, நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிப்பு, கொசு புகை அடிப்பது, ஏடிஸ் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்திடும் வகையில், அதன் முட்டையை உண்ண கூடிய கம்பூசியா மீன் குஞ்சுகளை நீர்நிலைகளில் விட்டு வருகின்றனர். மேலும், கம்பூசியா மீன் குஞ்சுகள் சுகாதார இணை இயக்கநர் அலுவலகம் மூலம் பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், மருத்துவ முகாம் மூலம் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் அறிகுறி குறித்தும், அதற்கான தடுப்பு நடவடிக்கை பற்றிய தகவல் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் மழைநீர் மற்றும் நன்னீரில் வளரக்கூடிய ஏடிஸ் வகையை சேர்ந்தது. இந்த கொசுக்கள் சாதாரண கொசுக்களை காட்டிலும் அளவில் பெரிதாக இருக்கும். அதிகாலை நேரங்களிலே இந்த கொசு மனிதர்களை கடிக்கக் கூடியது. இந்த கொசு கடித்ததும் உடலில் தடுப்பு ஏற்பட்டு, காய்ச்சலை ஏற்படுத் தும். இதை தடுக்க பொதுமக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் அசோக்குமார் கூறியதாவது:
சேலம் மாநகராட்சி பகுதியில் டெங்கு நோய் தடுப்பு பணியில் 16 மருத்துவர்கள் தலைமையில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏடிஸ் கொசு உற்பத்தியை தடுக்க கம்பூசியா மீன் குஞ்சுகள் நீர்நிலைகள், தொட்டிகளில் விட்டு வருகிறோம். 120 மருத்துவ முகாம் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு தடுப்புக்காக 48 மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதன்பின்னர் யாரும் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகவில்லை.
இவ்வாறு கூறினார்.
அறிகுறியும், தடுக்கும் முறையும்
சேலம் சுகாதார துறை இணை இயக்குநர் மருத்துவர் ஜெகதீஸ்குமார் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் 20 மருத்துவர்கள் தலைமையில் டெங்கு ஒழிப்பு ஆப்ரேஷன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் டெங்கு பரவாமல் தடுத்திட வீடு, வீடாக சென்ற ஆய்வு பணியில் ஈடுபட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், உடல் வலி, கண்ணுக்கு பின்னால் வலி, உடல் சோர்வு இருந்தால் டெங்கு நோய்க்கான அறிகுறி. எனவே, இந்த அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதை அருந்துவதால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT