Published : 03 Jul 2020 08:44 AM
Last Updated : 03 Jul 2020 08:44 AM

தமிழகத்தில் 24 தனியார் ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடக்கம்: பல மடங்கு கட்டணம் உயரும் அபாயம்

சென்னை

தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் 24 தனியார் ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், ரயில் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வேயின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்வேயில் பாதுகாப்பை அதிகப்படுத்தி, உலகத் தரம்வாய்ந்த பயணத்தைப் பயணிகளுக்கு வழங்கவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான நவீன ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். முதல்கட்டமாக 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும். ஒவ்வொரு ரயிலிலும் 16 முதல் 24 பெட்டிகள் வரையில் இருக்கும். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும். இதன் மூலம் பயண நேரம் பெரிய அளவில் குறையும்.

இந்த ரயிலை இயக்கும் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர்கள் ரயில்வே துறையினராக மட்டுமே இருப்பார்கள். ரயிலை நிர்வாகம் செய்யும் தனியார் துறையினர், குறித்த நேரத்தில் இயக்குதல், நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல், ரயிலைப் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடுமுழுக்க பல்வேறு வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க மும்பை - 2, டெல்லி -2, சண்டிகார், சென்னை, செகத்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக என பிரிக்கப்படவுள்ளன. சென்னை தொகுப்பில் மட்டும் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை - மதுரை, சென்னை - மங்களூர், சென்னை - கோயம்புத்தூர், திருச்சி - சென்னை, கன்னியாகுமரி - சென்னை, சென்னை - புதுடெல்லி, சென்னை - புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக டிஆர்இயுவின் துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘ரயில்வேத் துறையில் தனியார் ரயில்களை இயக்குவதால், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ரயில் கட்டணங்கள் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ரயில்வே பொதுத்துறை நிறுவனத்தில் தனியார் ரயில்களை இயக்க திட்டமிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. ரயில்வே இந்த முடிவை கைவிடாவிட்டால் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x