Published : 03 Jul 2020 08:09 AM
Last Updated : 03 Jul 2020 08:09 AM

மக்களை சகோதரத்துவத்துடன் அணுகுங்கள்; சென்னை மாநகர போலீஸாருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நன்றி- ஏ.கே.விஸ்வநாதன் உருக்கமான கடிதம்

சென்னை

காவல் ஆணையர் பதவியில் இருந்து விடைபெறும் முன், சென்னை போலீஸாருக்கு நன்றி தெரிவித்து ஏ.கே.விஸ்வநாதன் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி போலீஸார் அனைவருக்கும் அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 3 ஆண்டுகளாக சென்னை பெருநகர காவல் துறையினருடைய சிறப்பான பங்களிப்பு மூலம் சென்னை மக்கள் நம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதற்கு காவல் ஆளினர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தங்களுடைய உழைப்பையும், திறமையையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

நன்றியுடன் நினைவுகூர்கிறேன்

குறிப்பாக சிசிடிவி உள்ளிட்ட பல தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியாவிலேயே சென்னையை பாதுகாப்பான நகரமாக உருவாக்கியதற்கு நீங்கள் சிந்திய வியர்வையை நான் இன்று நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

நம்மை நாடி வருகின்ற புகார்தாரர்களை, மற்றவர்கள் எவ்வாறு நம்மை நடத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோமோ அதுபோன்றே நாமும் மற்றவர்களை நடத்த வேண்டுமென்ற அறிவுரைக்கிணங்க நீங்கள் ஒவ்வொருவரும் நடந்து கொண்ட விதத்தால் காவல் துறைக்கு பொது மக்களிடமிருந்த அன்பும், நன் மதிப்பும் பன்மடங்கு பெருகியுள்ளது என்பதை நாம் அறிவோம்.

என் மனதில் நிலைத்து நிற்கும்

தீபாவளி, பொங்கல் விழா மற்றும் சர்வதேச மகளிர் தினம்போன்ற விழாக்களை காவலர்கள் குடும்பத்துடன் கொண்டாடிய நாட்கள் என்றென்றும் என்மனதில் நிலைத்து நிற்கும். சவாலான பல்வேறு சூழ்நிலையிலும், கரோனா காலத்திலும் நீங்கள் முன்வரிசையில் நின்றுசிறப்பாக பணியாற்றியிருக்கிறீர்கள். அதற்கு உங்கள் குடும்பத்தினர் உற்ற துணையாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றியும்பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.

நான் விடைபெறும் நேரத்தில் மீண்டும் உங்களை அதேபொறுப்புணர்வுடனும், கடமைஉணர்வுடனும், சகோதரத்துவத்துடனும் மக்களை அணுக வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு, சென்னை பெருநகர காவல் துறையின் மாண்பை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஏ.கே.விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x