Published : 03 Jul 2020 08:00 AM
Last Updated : 03 Jul 2020 08:00 AM
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு ராகூட்டன் கிரிம்சன் ஹவுஸ் உள்ளிட்ட 5 வெளிநாட்டு மின்னணு வணிக நிறுவனங்களின் தலைவர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்துக்கு வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமர்வுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதாரச் சூழலில்ஏற்படுத்தியுள்ள விளைவுகளால் சில நாடுகளில் உள்ள தொழில்நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவுக்கு இடம்பெயர்த்த முடிவெடுத்துள்ளன. சமீபத்தில் ரூ.15 ஆயிரத்து 128கோடி முதலீட்டுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது, இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த இடமாக தமிழகத்தைக் கருதுவதை காட்டுகிறது.
5 முன்னணி நிறுவனங்கள்
தற்போது ராகூட்டன் கிரிம்சன்ஹவுஸ் நிறுவன முதன்மை செயல்அலுவலர் ஹிரோஷி மிகிடனி,பி2டபிள்யூ நிறுவன முதன்மைசெயல் அலுவலர் மரிகோ குரூஸ்மெய்ல்லஸ், சீ லிமிடெட் நிறுவனதலைவர் ஃபாரஸ்ட் லீ, க்யூஓஓ10பிரைவேட் லிமிடெட் நிறுவனமுதன்மை செயல் அலுவலர் ஹூயங்க் பே, ஷாலண்டோ எஸ்ஈ ஹெட்குவாட்டர் நிறுவன முதன்மைசெயல் அலுவலர் ரோபர்ட் ஜென்ட்ஸ் ஆகிய 5 முன்னணிமின்னணு வணிக நிறுவனங்களின் தலைவர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT