Published : 23 Sep 2015 01:20 PM
Last Updated : 23 Sep 2015 01:20 PM

சுகாதாரமற்ற சூழலில் ‘ஊட்டி வர்க்கி’ உற்பத்தி: புவிசார் குறியீடு கிடைக்குமா?

உதகையில் சுகாதாரமற்ற சூழலில் ‘ஊட்டி வர்க்கி’ உற்பத்தி செய்யப்படுவதால், புவிசார் குறியீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உதகை என்றால் சுற்றுலாவுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது ‘ஊட்டி வர்க்கி’. சுற்றுலா முடிந்து ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள், வர்க்கி வாங்கிச் செல்ல மறப்பதில்லை.

‘ஊட்டி வர்க்கி’-க்கான அபரிமித வரவேற்பால், நாளொன்றுக்கு 10 டன் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. சமவெளிப் பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பம்

இந்நிலையில், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமே வர்க்கி எனக் கூறி, புவிசார் குறியீடு பெற உற்பத்தியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். புவிசார் குறியீடு கிடைக்கும்பட்சத்தில், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமே ‘ஊட்டி வர்க்கி’ என அழைக்கப்படும் வாய்ப்புள்ளது.

சிக்கல்

இந்நிலையில், வர்க்கி ஆரோக்கியமற்ற பதார்த்தம் என்றும், மாட்டுக் கொழுப்பு சேர்க்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

உதகை பாம்பே கேசில் பகுதியிலுள்ள வர்க்கி கிடங்குகளை, உணவுப் பாதுகாப்பு அதிகாரி ரவி ஆய்வு செய்தார். அப்போது கிடங்குகள் சுகாதாரம் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் கூறும்போது, “வர்க்கியில் மாட்டுக் கொழுப்பு சேர்க்கப்படுவதாக, 2 மாதங்களாக புகார்கள் வந்தன. அதனடிப்படையில் கிடங்குகளை ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எந்தவித பதார்த்தமும் உற்பத்தி செய்யக்கூடாது என்றும் கிடங்குகளை தூய்மையாக பராமரிக்கவும், பதார்த்தங்களை தரமானதாக உற்பத்தி செய்யவும் உத்தரவிடப்படப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வர்க்கி கிடங்குகளிலும் ஆய்வு தொடரும்” என்றார்.

வர்க்கி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி எம்.முகமது கூறியதாவது:

சுகாதாரமற்ற சூழலில் வர்க்கிகள் உற்பத்தி செய்யப்படுவதாக, உணவுப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளதால், அதற்கு புவிசார் குறியீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு கிடைத்தால், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும். தொன்மையான இந்தத் தொழில் பாதுகாக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் 100 முதல் 150 வர்க்கி கிடங்குகள் உள்ளன. 10 முதல் 15 டன் வர்க்கி உற்பத்தி செய்யப்படுகிறது. சமவெளிப் பகுதிகளில் ‘ஊட்டி வர்க்கி’ என்ற பெயரில் பதார்த்தம் விற்கப்படுகிறது. இது போலியானது. புவிசார் குறியீடு பெற முயற்சித்து வருகிறோம்.

இந்நிலையில், கிடங்குகளை தூய்மையாக பராமரிக்காவிட்டால் இந்த முயற்சிக்கு பாதிப்பு ஏற்படும். இதுகுறித்து கிடங்கு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்கு சிலர் அலட்சியம் காட்டுகின்றனர். தூய்மையான முறையில் வர்க்கி உற்பத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x