Published : 02 Jul 2020 03:29 PM
Last Updated : 02 Jul 2020 03:29 PM
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உதகையைச் சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் கட்டுக்குள் இருந்த பாதிப்பு தற்போது 200 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்தது. கேத்தியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நோய்த் தொற்று ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் குடும்பத்தார் மற்றும் இரண்டாம் நிலை தொடர்புடையவர்கள் என தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையல், உதகை கிரீன்பீல்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் வெளி மாவட்டத்துக்குச் சென்று வந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார். இவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்களுக்குத் தொற்று இல்லை எனத் தெரியவந்தது.
முதியவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 2) காலை திடீரென உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் நபர் இவராவார்.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "உயிரிழந்த முதியவருக்கு இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் இருந்தது. இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவரது உடல் கோவையிலேயே அடக்கம் செய்யப்படும்" என்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில், பொதுப் போக்குவரத்து தொடங்கியதும், மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்று, இங்கே வந்தவர்களால் தொற்று வேகமாகப் பரவியது. குறிப்பாக கேத்தியில் உள்ள தனியார் நிறுவனத்தினர் தகவல் தொடர்பு அதிகாரி மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சதம் கண்டது. தற்போது உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT