Published : 02 Jul 2020 03:05 PM
Last Updated : 02 Jul 2020 03:05 PM
சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தது தொடர்பாக துணிச்சலாக சாட்சியம் அளித்த பெண் தலைமைக்காவலர் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால், அங்கு பெண் தலைமைக்காவலராக பணியாற்றிய ரேவதி நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் துணிச்சலாக சாட்சியம் அளித்தார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீஸார் இரவும் முழுவதும் கொடூரமாக தாக்கியதாகவும், அதில் போலீஸாரின் லத்திக்கள் மற்றும் மேஜையில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ரேவதியின் சாட்சியம் இந்த வழக்கில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சில போலீஸாரை கைது செய்திருப்பதற்கு ரேவதியின் சாட்சியமும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதேவேளையில் போலீஸாருக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் தனக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரேவதி வேண்டுகோள் விடுத்தார். இந்த விவரத்தை நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மேலும், அவருக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் புகழேந்தி, பிரகாஷ் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும், நீதிபதிகள் ரேவதியுடன் போனில் பேசி பாராட்டியதுடன், தைரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சாத்தான்குளம் அருகேயுள்ள அறிவான்மொழி கிராமத்தில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 பெண் காவலர்கள் அவரது வீட்டுக்கு வெளியே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவரது கணவர் சந்தோஷ் கூறும்போது, எங்களது வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் எனது மனைவிக்கு மேலதிகாரிகளால் எந்தவித தொந்தரவும் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT