Published : 02 Jul 2020 01:09 PM
Last Updated : 02 Jul 2020 01:09 PM
சென்னையில் சைபர் குற்றங்களைக் களைய தனியார், ஐடி நிறுவனங்களுடன் இணைந்து சைபர் பிரிவை மேம்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
புதிய காவல் ஆணையராகப் பதவி ஏற்றவுடன் செய்தியாளர்களிடம் மகேஷ்குமார் அகர்வால் அறிக்கை வாசித்தார்.
“என்னைக் காவல் ஆணையராக நியமித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் பதவியில் பொதுமக்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன். சென்னை காவல்துறையில் சுமார் 20 ஆயிரம் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். அவர்களது நலனை விரும்புகிறேன். பொதுமக்கள் அவர்கள் குறைகளை என்னிடம் வீடியோ கால் மூலமாகத் தெரிவிக்க ஏற்பாடு செய்கிறேன்.
கரோனா நோயைத் தடுக்க தமிழக அரசின் வழிகாட்டுதல்படி முகக்கவசம், கையுறை, சமூக விலகல் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களுக்குச் சேவை செய்ய பொதுமக்கள், ஊடக ஒத்துழைப்பு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு மகேஷ்குமார் அகர்வால் அளித்த பேட்டி:
“கரோனா நோய்த்தடுப்புக்கான முக்கியமான வழி என்னவென்றால், பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே வரக்கூடாது. ஆனால், காவல்துறை பணி என்னவென்றால் கரோனா பாதுகாப்புக்காக வெளியே வரவேண்டி உள்ளது. அவர்கள் அடிக்கடி கை கழுவ வேண்டும். முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் இந்த விஷயத்தில் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் வெளியே வராமல் இருந்தால் போலீஸார் தங்கள் பணியைச் செய்வது எளிதாக இருக்கும். போலீஸாருக்கும் கரோனா தொற்று ஏற்படாமலும் தடுக்க முடியும்.
எங்களது முக்கிய நோக்கம் பொதுமக்கள் நலன். அதற்காக அவர்களது குறைகளைக் கேட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் கரோனா காலத்தில் நேரடியாக வர முடியாத நிலை இருக்கும். ஆகவே, வீடியோ கால் மூலமாக அவர்கள் குறைகளை நேரடியாக என்னிடம் புகார் அளிக்கலாம். தினமும் அல்லது இரண்டு நாளைக்கு ஒருமுறை வீடியோ காலில் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும்.
அதேபோன்று போலீஸார் நலனும் பேணப்படும். மூன்றாவது கண் சிசிடிவி கேமரா திட்டம் முக்கியமான ஒன்றாக சென்னையில் குற்றத்தடுப்பாக இருந்தது. நானே தெற்கு கூடுதல் ஆணையராக இருந்தபோது அதன் ஒரு அங்கமாக இருந்தேன். ஆகவே, அந்த நடைமுறையை மேலும் வலுப்படுத்த முயற்சி எடுப்பேன்.
போலீஸாருக்கு மனவளப் பயிற்சி தொடர்ந்து இருக்கும். தொற்று நோய் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸாருக்கு மன அழுத்தம் இருக்கிறது. தொற்றுநோய் காலத்தில் மற்றவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால், போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருக்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு தினசரி ஆலோசனை கொடுத்து பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படுகின்றன.
ஜூலை 10-ம் தேதியிலிருந்து அனைத்து போலீஸாருக்கும் பகுதி பகுதியாக பயிற்சி கொடுக்க உள்ளோம். அதில் சிலருக்கு அதிகம் தேவைப்படுகிறது என்றால் அது பற்றியும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றத்தடுப்பு மிக முக்கியமான ஒன்று. அதற்கு சிசிடிவி கேமராக்கள் மிக உதவியாக உள்ளன. அதனால் குற்ற எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. செயின்பறிப்பு, மொபைல் பறிப்பு முக்கியமான ஒன்றாக இருந்தது.
தமிழக காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்க வசதி இருக்கிறது. ஆன்லைன் புகார்களை உரிய முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுப்போம். பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியம். புகார்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்படுவோம். சைபர் குற்றங்கள் சிறிது அதிகரித்து வருகின்றன. நமது சமூகத்தில் சைபர் குற்றங்களை அதிகம் புகார் அளிக்காமல் இருக்கின்றனர். அதில் வன்முறை இல்லாதது முக்கியக் காரணமாக இருக்கிறது. அதனால் சில நேரம் தாமதம் இருக்கும்.
நான் சிபிசிஐடியில் இருக்கும்போது சைபர் க்ரைம் பிரிவைக் கையாண்டுள்ளேன். சைபர் க்ரைமில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் தொடர்பில்லாதவர்களாக இருப்பார்கள். அதில் என்ன பிரச்சினை என்றால் குற்றவாளிகள் அடையாளம் அற்றவர்களாக எங்காவது வெளி மாநிலங்களிலிருந்து, வெளிநாட்டிலிருந்து இயங்குவார்கள். அதனால் பிடிப்பதில் சிரமம் இருக்கும்.
ஆனாலும், நாம் ஆர்பிஐயிலிருந்து கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல் படி செயல்படுகிறோம். பொதுமக்கள் 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அவர்கள் கையாடல் செய்யும் பணம் கிடைக்காமல் தடுக்க முடியும். சைபர் குற்றங்களைத் தடுக்க என்ன செய்வது என சில யோசனைகள் வைத்துள்ளேன்.
தனியார் மற்றும் தனியார் ஐடி துறையினருடன் இணைந்து அவர்களது அனுபவ அறிவைப் பயன்படுத்தி சைபர் துறையில் மேம்படுத்தவும், குற்றங்களைக் களையவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
தமிழ்நாட்டில்தான் பெண்கள் பிரச்சினையைக் கையாள அதிக அளவில் மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. அதுதவிர தமிழக அரசு சென்னை நகரத்தில் பெண்களுக்கான தனி பேட்ரால் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எந்தப் பகுதியில் அதிகம் இருக்கிறது என்பதைக் கண்காணித்து என்ன வகையான குற்றங்கள் உள்ளன என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சினைகள், குற்றத்தடுப்பு நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களை இணைத்து ஒரு விழிப்புணர்வு முயற்சியும் எடுக்கப்படும்”.
இவ்வாறு சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT