Published : 02 Jul 2020 01:07 PM
Last Updated : 02 Jul 2020 01:07 PM
சாத்தான்குளம் விவகாரத்தில் மிகவும் தைரியமாக சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலருக்கு உரிய பாதுகாப்பு, உதவி வழங்கப்படும் என, புதிதாக பொறுப்பேற்ற தென்மண்டல ஐஜி முருகன் கூறினார்.
தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து ஏற்கனவே 2015-ல் தென்மண்டல ஐஜியாக இருந்த நிலையில், மீண்டும் 2-வது முறையாக நியமிக்கப்பட்ட எஸ்.முருகன் மதுரையிலுள்ள அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
அவருக்கு மதுரை எஸ்பி மணிவண்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஐஜி முருகன் செய்தியாளர்களிடம் கூறியது:
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிந்தது தொடர்பாக மிகவும் தைரியமாக சாட்சியம் அளித்த அந்த காவல் நிலைய தலைமை பெண் காவலர் ரேவதிக்கு காவல்துறை சார்பில், தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும்.
மேலும், அவருக்கு வேண்டிய உதவிகளும் வழங்கப்படும். காவல் நிலையங்களில் மரணம் என்பது தவிர்க்கப்பட வேண்டியது. தென்மாவட்டங்களில் இதனை தடுக்க போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிசிஐடி சிறப்பான விசாரணையை மேற் கொண்டுள்ளது. அதற்கான முழு ஒத்துழைப்பை உள்ளூர் போலீசார் வழங்குகின்றனர்.
லாக் அப் மரணம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே காவல்துறையின் நிலைப்பாடு. எப்போதாவது நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கலங்கம் ஏற்படுத்திவிடுகிறது. ஒரு சிலரின் தவறை வைத்து, அனைத்து காவலர்களையும் தவறாக கருதக்கூடாது.
சாத்தான்குளம் விவகாரத்தில் கைது செய்யப்படும் காவலர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவர். இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினருக்கு போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை முறையாக பின்பற்றினாலே இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்படும்.
தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான மோதல்கள் 1990-களில் இருந்த அளவுக்கு தற்போது இல்லை என்றாலும், காவல்துறையின் நடவடிக்கையால் சாதிய மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளன. சைபர் கிரைம் குற்றங்கள் தனிநபர் குற்றமாக மாறி உள்ளது.
மின்னஞ்சல் வழியாக புகார் அளித்தாலே போதும், அந்தந்த காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பர். தென்மாவட்டத்தில் எவ்வித பிரச்னையாக இருந்தாலும் பொதுமக்கள் எனது கவனத்துக்கொண்டு வரலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT