Published : 02 Jul 2020 12:36 PM
Last Updated : 02 Jul 2020 12:36 PM
காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்மையார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பின்றி இன்று எளிமையான வகையில் நடைபெற்றது.
63 நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் சிறப்பிடம் பெற்றவரும், பெண் நாயன்மாரும், சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டவரும், ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது. இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் நடத்தப்படும் மாங்கனித் திருவிழாவை பக்தர்கள் பங்கேற்பின்றி எளிய முறையில் கைலாசநாதர் கோயிலுக்குளேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று (ஜூலை 1) மாலை மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு வைபவத்துடன் மாங்கனித் திருவிழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான காரைக்கால் அம்மையார்- பரமதத்தர் திருக்கல்யாண வைபவம் இன்று (ஜூலை 2) காலை 9 முதல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. வழக்கமாக அம்மையார் கோயில் மணிமண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். இன்று கைலாசநாதர் கோயிலில் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தையொட்டி கோயில் மகா மண்டபத்துக்கு புனிதவதியார் எழுந்தருளினார். பின்னர் பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் வந்தடைந்ததும், திருக்கல்யாண நிகழ்வுகள் தொடங்கின. சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார்கள் எடுத்துக் காண்பித்து, வைபவத்தில் பங்கேற்றிருந்தோர் முன்னிலையில் அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்தோர் அட்சதை தூவி அம்மையாரை வழிபட்டனர். பின்னர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனைக் காட்டப்பட்டு,16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன.
இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாநில அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.கந்தசாமி, ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.ஏ.யு.அசனா, கீதா ஆனந்தன், சந்திர பிரியங்கா, கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரிய நிர்வாகிகள், உபயதாரர்கள், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.
நாளை (ஜூலை 3) மாலை 3.30 மணிக்கு பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம், நாளை மறுநாள் (ஜூலை 4) காலை 11.30 மணிக்கு பிச்சாண்டவர் கோயில் உள் பிரகாரத்தில் புறப்பாடு (மாங்கனி இறைத்தல் வைபவம்), மதியம் 12.15 மணிக்கு காரைக்கால் அம்மையார் மாங்கனியுடன் சிவபெருமானுக்கு அமுது படைத்தல் நிகழ்வு, இரவு 8 மணிக்கு பரமதத்தருக்கு இரண்டாவது திருமண நிகழ்வு உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் கோயில் இணையதளம் (www.karaikaltemples.com), யூ டியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
இதனிடையே, பக்தர்கள் நன்கொடையின் மூலம் ரூ.9 லட்சம் செலவில் காரைக்கால் அம்மையார் கோயில் பிரகாரத்தை சுற்றிலும் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை உணர்த்தும் விதமாக புடைப்புச் சிற்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்து சிற்பங்களை பார்வையிட்டார்.
மேலும், காரைக்கால் அம்மையார் குளம் என்று அழைக்கப்படும் சந்திர தீர்த்தக் கரையில் ரூ.4 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில், கோயில் மற்றும் குளக்கரையை சுற்றிலும் ரூ.5 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்குகள், ரூ.2.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT