Published : 02 Jul 2020 07:08 AM
Last Updated : 02 Jul 2020 07:08 AM
சென்னை காவல் ஆணையராக 3 ஆண்டுகள் சிறப்பாக பணி செய்த ஏ.கே.விஸ்வநாதன், செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.கே.விஸ்வநாதன் சென்னை காவல் ஆணையராக பதவி வகித்தகாலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். தொழில் நுட்பங்களையும் புகுத்தினார். குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் சென்னை முழுவதும் ‘மூன்றாவது கண்‘ என்ற பெயரில் 10 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா என, 2.5 லட்சத்துக்கும் அதிகமான கேமராக்களை நிறுவ நடவடிக்கை எடுத்தார்.
தெருக்கள்தோறும் சிசிடிவி கேமரா
ஒவ்வொரு தெருக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாலை சந்திப்புகள் என அனைத்திலும் சிசிடிவி பொருத்தியதில் ஏ.கே.விஸ்வநாதன் காட்டிய முனைப்பு அபாரமானது. இதையடுத்து சங்கிலிப் பறிப்புகள் (2017) 615,(2018) 443, (2019) 307 என படிப்படியாக குறைந்தன. ஆதாயக் கொலைகளும் கட்டுக்குள் வந்தன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திராஉள்ளிட்ட வெளிமாநில கொள்ளை கும்பல்கள் சிசிடிவி கேமரா உதவியால் பிடிப்பட்டன. சிசிடிவி நிறுவிசெயல்முறைப்படுத்தியது மற்றும்போக்குவரத்து துறையில் பணமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்தியதற்காக மத்திய அரசின் 2 ‘ஸ்காச்‘ விருதுகளை சென்னை காவல் துறை பெற்றது.
பெண்கள் பாதுகாப்புக்கு ‘தோழி’
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ‘தோழி‘ என்ற திட்டத்தை கொண்டு வந்தார். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான பெருநகரமாக சென்னை நகரை திகழ வைத்தார்.காவலர்களின் பணிப்பளுவை குறைக்க யோகா, உடற்பயிற்சிகூடங்களை அமைத்தார். போலீஸாரின் குழந்தைகளுக்காக காப்பகம் ஏற்படுத்தினார்.
அதிகார தோரணையின்றி கடைநிலை காவலர்களுடனும் நெருங்கிபழகினார். காவலர்கள் தவறிழைத்தால் பாதிக்கப்பட்டவரின் வீi்ட்டுக்கே சென்று வருத்தம் தெரிவித்தார். சிறப்பாக பணி செய்த போலீஸாரை நேரில் அழைத்து வெகுமதிஅளிப்பதை வழக்கமாக்கினார்.
இந்தியப் பிரதமர், சீன அதிபர் சந்திப்பின்போது சிறப்பான பாதுகாப்பு பணிக்காக சீன அதிகாரிகளின் பாராட்டை பெற்றார். 2019-ல்சிறந்த ஆளுமைக்கான தமிழக முதல்வரின் விருது, சென்னை காவல் துறைக்கு வழங்கப்பட்டது.
சிறந்த காவல் ஆணையர் விருது
மேலும், தமிழகத்திலேயே சிறந்த காவல் ஆணையராகவும் விருது பெற்றார். 3 ஆண்டுகளாக பம்பரமாய் சுழன்று பணி செய்தமைக்காக அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் தற்போது பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது ஆணையராக பொறுப்பேற்க உள்ள மகேஷ்குமார்அகர்வாலும் திறமை வாய்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 22 வயதில் ஐபிஎஸ் ஆனார்.தேனி, தூத்துக்குடி, சென்னை உட்பட பல மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். சிபிசிஐடியில் அதிக அனுபவம் கொண்டவர். தென்சென்னை கூடுதல் காவல் ஆணையராகவும் பதவி வகித்தார். நேர்மையானவர் என பெயர்பெற்றவர், புதிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT