Published : 01 Jul 2020 07:38 PM
Last Updated : 01 Jul 2020 07:38 PM
மதுரை கண்மாய்களில் தென் அமெரிக்க வளர்ப்பு மீனினம் பெருகியதால் ஏற்கெனவே இந்த நீர்நிலைகளில் காணப்பட்ட அரிய வகை நாட்டு மீன்கள் அழிந்து நீர்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் அணைகள், ஆண்டு முழுவதும் நீரோட்டமுள்ள சிற்றாறுகள், நீர் வீழ்ச்சிகள் பெரியளவில் இல்லை. வைகை அணையும், வைகை ஆறும் மட்டுமே ஒட்டுமொத்த மதுரையின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரம்.
ஆண்டு முழுவதும் நீரோட்டம் காணப்பட்ட வைகை ஆறு தற்போது நிரந்தர வறட்சிக்கு இலக்காகிவிட்டன. வைகை அணையில் திறந்துவிட்டால் மட்டுமே ஆற்றில் தண்ணீர் வருகிறது.
ஆரம்ப காலத்தில் வைகை ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்ததால் கரையோரங்களில் மக்கள் விலை விரித்து நாட்டு மீன்கள் அதிகளவு பிடிப்பார்கள். வைகை அணையில் இருந்து கால்வாய்கள் வழியாக மதுரை கண்மாய்களுக்கும் தண்ணீர் வந்ததால் கடல் போல் கண்மாய்களும் நிரம்பி காணப்பட்டன. அதனால், கண்மாய்களில் நாட்டு மீன்கள் அதிகளவு பெருகின. நாட்டு மீன்களை பிடிக்க கண்மாய்களை டெண்டர் எடுக்கவும் மீன் வியாபாரிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது.
இந்நிலையில் வைகை அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குடிநீர் திட்ட ஆதாரத்திற்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரளவு மழை பெய்ததோடு வைகை அணையில் இருந்தும் தண்ணீர் வந்ததால் கண்மாய்களில் தற்போது ஒரளவு தண்ணீர் உள்ளது. இந்த கண்மாய் கரையோர தண்ணீரில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் மீன்கள் பிடிக்கின்றனர். அதுபோல் கண்மாய் உள்ளே சென்றும் பலர் மீன் பிடிக்கின்றனர். இதில், பெரும்பாலும் சாப்பிட உதவாத தென் அமெரிக்க வளர்ப்பு மீன்கள் கிடைக்கின்றன. இந்த மீனினங்கள் அதிகளவு கண்மாய்களில் பெருகியுள்ளன.
நாட்டு மீன்கள் மிகக் குறைவாகவே கண்மாய்களில் உள்ளன. இந்த வளர்ப்பு மீன்கள் பெருக்கத்தால் கண்மாய்களில் நாட்டுமீன்கள் அழிந்து நீர்ச் சூழலும் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து ’திருநகர் பக்கம்’ ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான விஷ்வா கூறுகையில், ‘‘டேங்க் கிளீனர் (Tank Succer/ Tank Cleaner) எனும் அலங்கார வளர்ப்பு மீன் வைகை அணையில் அபரிதமாக பெருகி, ஆறு கடக்கும், ஆறு இணைக்கும் நீர்நிலைகளில் எல்லாம் ஆக்கிரமித்து உள்ளன.
இவ்வகை மீன்கள் நாட்டு மீன்களின் பெருக்கத்தை தடுப்பதோடு, அவைகளின் அழிவிற்கு மிக முக்கியக் காரணியாக உள்ளன. உதாரணமாக திருநகர் அருகே கூத்தியார் குண்டு கண்மாயில் இவ்வகை மீன்கள் அதிகம் பெருகிவிட்டன.
இவ்வகை மீன்களை நீர்நிலைகளில் இருந்து அகற்றிட வண்டும். அலங்கார வளர்ப்பு மீன்களை இயற்கை சூழலில் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டங்களை பலப்படுத்த வேண்டும். நன்னீர் சூழலை சார்ந்து வாழும் நன்னீர் உயிர்கள். இதனை சார்ந்து வாழும் பறவைகள், ஊர்வனங்கள், பாலூட்டிகள் அனைத்தும் இவைபோன்ற அயல் நாட்டு மீன்களால் பாதிப்புக்குள்ளாகிறது.
எல்லா அலங்கார மீன்கள் மற்றும் செல்லபிராணிகள் விற்பனை நிலையங்களில் வளர்ப்பு உயிர்களை இயற்கை சூழலில் கொண் வந்து விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்ற எச்சரிக்கை விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும், ’’ என்றார்.
திருநகர் முல்லை நகரை சேர்ந்த மீன்பிடிப்பாளர் முரளி கூறுகையில், ‘‘நாட்டு மீன்களுக்கு வலை விரிச்சா, எதுக்கும் உதவாத தென் அமெரிக்க வளர்ப்பு மீன்கள் வந்து விரிச்சு வலையில் சிக்குகின்றன.
வலையில் சிக்கி, தப்பிக்க வலைய கடிச்சு சேதப்படுத்தவும் செய்கின்றன.
சிக்குனதை கரையில் வீசி செல்கிறோம். நாங்களாவது கரையில் வலை விரிக்கிறோம். உள்ளே சென்று மீன்பிடிப்போருக்கு ஒரு நாளைக்கு 5 கிலோ முதல் 10 கிலோ வரை இந்த வகை வளர்ப்பு மீன்கள் சிக்குகின்றன.
ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை எடை உள்ளது. கூத்தியார் குண்டு கண்மாய் மட்டுமில்லாது எல்லா கண்மாய்களிலும் இந்த மீன்களை தற்போது பார்க்கலாம். இந்த மீன்கள் ஒன்று அணையில் இருந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. அல்லது யாராவது விட்டிருக்கலாம், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT