Published : 01 Jul 2020 07:03 PM
Last Updated : 01 Jul 2020 07:03 PM
கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக இன்று (ஜூலை 1) மாலை சிபிசிஐடி ஆய்வாளர் தலைமையில் கிளைச் சிறையில் விசாரணை நடத்தப்பட்டது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் கடந்த 19-ம் தேதி சாத்தான்குளம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, 20-ம் தேதி கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் 22-ம் தேதி இரவு உடல்நிலை குறைவால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ் இரவு 9 மணிக்கு உயிரிழந்தார்.
அன்றிரவே உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட அவரது தந்தை ஜெயராஜ் மறுநாள் (23-ம் தேதி) அதிகாலை 5.40 மணிக்கு உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்படைக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சிபிஐ விசாரணை தொடங்கும் வரை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மாலையே சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியது.
தந்தை, மகன் உயிரிழப்பதற்கு முன்னதாக அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ள சிபிசிஐடி போலீஸார், அது தொடர்பான தபாலை கோவில்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் இன்று ஒப்படைத்தனர்.
இன்று மாலை சிபிசிஐடி ஆய்வாளர் சரவணகுமார், உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி கிளை சிறைக்கு வந்தனர்.
அவர்கள் தந்தை, மகன் அடைக்கப்பட்டு இருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து கிளைச் சிறை கண்காணிப்பாளர் மற்றும் விசாரணை நடத்தினார்.
மேலும், தந்தை, மகன் அடைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்கள் சிறைக்குக் கொண்டு வரப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT