Published : 01 Jul 2020 07:15 PM
Last Updated : 01 Jul 2020 07:15 PM
அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஆவின் பால் அட்டை விற்பனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என, ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிறுவனம் இன்று (ஜூலை 1) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"ஆவின் எனும் வணிகப் பெயர் கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்துக் குடும்பங்களிலும் பிரபலமாக உச்சரிக்கப்பட்டு வரும் பெயராக உள்ளது. கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்குக் கட்டமைப்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 4.5 லட்சம் பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் மூலம் தமிழகத்தில் நாளொன்றுக்கு 39 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 25 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் பால் உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக 13 லட்சம் லிட்டர் பாலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் 11.60 லட்சம் லிட்டர் பாலும் விற்பனை செய்யப்படுகிறது. பால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் சென்னை மாநகர் பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாதாந்திர பால் அட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து ஒன்றியங்களிலும் விற்பனை மேலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலமாக அனைத்து உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், தேநீர் விடுதிகள் மற்றும் மளிகைக் கடைகள் ஆகிய இடங்களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனையானது நேற்று (ஜூன் 30) வரை இதுவரை கண்டிராத உயர்ந்த அளவாக 12.03 லட்சம் லிட்டர் என்ற புதிய இலக்கினை எட்டியுள்ளது.
கரோனா தாக்கத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும், தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி உரிய நேரத்தில் கிடைத்திட, பொதுமக்களுக்குத் தேவைப்படும், இடங்களில் தற்காலிகமாக ஆவின் கடைகள் அமைத்தும் நடமாடும் பாலகங்கள் ஏற்படுத்தியும் பால் விற்பனை ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்களை வாங்கிப் பயன்பெறுமாறு ஆவின் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி கிடைத்திட ஏதுவாக அதிகப்படியான எண்ணிக்கையில் சில்லறை விற்பனையாளர்கள் ஆவின் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பால் அட்டை விற்பனையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகம் முழுவதும் கடுமையான கரோனா தொற்று உள்ள நெருக்கடியான இக்காலகட்டத்திலும் சென்னை மற்றும் தமிழகமெங்கும் தினசரி ஆவின் பால் விற்பனை அளவு 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அதைப் போலவே பால் பொருட்களின் விற்பனையும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்காக, மளிகைப் பொருட்கள் கொள்முதல் செய்யும் மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகிய இடங்களிலிலும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைத்திட ஏதுவாக ஆவின் முகவர் நியமன விதிகளில் ஆவின் நிறுவனம் மாற்றம் செய்துள்ளது. மேலும், இதற்கான வைப்புத் தொகை ரூ.1,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 495 புதிய விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசின் வழிகாட்டுதலின்படி கரோனா நோய் தடுப்புக் காலத்தில் தேவையான சத்துள்ள பால் கிடைக்கும் வண்ணம் அனைத்துப் பகுதிகளிலும் முகவர்களை நியமித்து ஆவின் நிறுவனம் மக்களுக்குச் சேவையாற்றி வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு சுமார் 5,800 கோடி விற்று முதல் செய்துள்ளது. ஆவின் நிறுவனம், மேலும் அதனை அதிகரிக்கத் தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆவின் நிறுவனத்தின் 24 மணிநேர நுகர்வோர் சேவைப் பிரிவு தொலைபேசி எண்: 7358018430; 044-23464575, 23464579, 23464578 மின்னஞ்சல்: aavincomplaints@gmail.com மூலம் முகவர் நியமனம் மற்றும் பால் அட்டைகளைப் பொதுமக்கள் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆகவே நுகர்வோர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேட்டுக்கொள்கிறார்".
இவ்வாறு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT