Published : 01 Jul 2020 07:05 PM
Last Updated : 01 Jul 2020 07:05 PM
‘பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 14-ல்’ விடுதலையாகிறார்’ என்று ஆசிர்வாதம் ஆச்சாரி ட்விட்டரில் கொளுத்திப் போட்ட செய்தி தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்றவைத்த நிலையில், நேற்றைய தினம் ‘இந்து தமிழ்’ இணையத்துக்குப் பிரத்யேகப் பேட்டியளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, “ஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலையாவதற்கு வாய்ப்பே இல்லை” என்று ஆணித்தரமாக மறுத்திருந்தார். ஆனால், “ஆகஸ்ட் என்ன... மூன்று மாதங்களுக்கு முன்பே சசிகலா விடுதலையாகி இருக்க வேண்டும்” என்று ஆதாரங்களின் அடிப்படையில் அடித்துச் சொல்கிறார் சசிகலாவின் வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர்பாண்டியன்.
இது தொடர்பாக இன்று ராஜா செந்தூர்பாண்டியன் ’இந்து தமிழ்’ இணையத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...
சசிகலா ஆகஸ்ட் 14-ல் விடுதலை ஆகிறார் என்று ஆசிர்வாதம் ஆச்சாரி சொன்ன செய்தி உண்மைதானா?
நாங்கள் எடுத்து வரும் சட்ட நடவடிக்கைகளை வைத்தும் கள நிலவரத்தை வைத்தும் ஒருவேளை அவர் அப்படிச் சொல்லி இருக்கலாம். ஆனால், சட்டப்படி பார்த்தால் மூன்று மாதங்களுக்கு முன்பே சசிகலா விடுதலையாகி இருக்க வேண்டும். எப்படி என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். சசிகலாவுக்கு கோர்ட் விதித்த தண்டனைக் காலம் 48 மாதங்கள். நேற்றுடன் இதில் 42 மாத கால தண்டணைக் காலத்தை அவர் கடந்துவிட்டார். வழக்கின் இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பாக இடையில் இரண்டு கட்டங்களாக 35 நாட்கள் அவர் சிறையில் இருந்திருக்கிறார். இதைக் கணக்கில் கொள்ளாவிட்டாலும்கூட இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே அவர் சிறையில் இருக்க வேண்டும்.
ஆனால், சிறையில் நன்னடத்தையுடன் நடந்து கொள்வதற்காகவும் சிறையில் பணி செய்வதற்காகவும் கைதிகளுக்கு மாதத்தில் 6 நாட்கள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும். அப்படிப் பார்த்தால் இதில் ஒரு நாலரை மாதம் தண்டனை குறைப்பு கிடைக்கும்.
இதையும் கணக்கில் கொள்ளாவிட்டாலும்கூட சிறையில் கைதிகள் நன்னடத்தையுடன் நடந்து கொள்வதைப் பொறுத்தும், கொடுத்த பணிகளைச் சரியாகச் செய்வதைப் பொறுத்தும் ஆண்டுக்கு சிறைக் கண்காணிப்பாளர் 30 நாட்களும் சிறைத்துறை ஐஜி 60 நாட்களும் தண்டனைக் குறைப்பு அளிக்க முடியும். தனது தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு நாட்களைச் சிறையில் கழித்த கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை அளிக்கப்படும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே சசிகலாவுக்கு இந்தச் சலுகையைப் பெறும் தகுதி வந்துவிட்டது. அதன்படி பார்த்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் (90x3) 270 நாட்கள். அதாவது 9 மாதங்கள் சசிகலாவுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கப்பட வேண்டும். மற்ற சலுகைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்தச் சலுகையை மட்டும் பரிசீலனைக்கு எடுத்திருந்தாலே இன்றைக்கு மூன்று மாதங்கள் முன்னதாகவே சசிகலா விடுதலையாகி இருப்பார்.
பிறகு ஏன் இன்னும் அவர் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்?
சிறை விதிகளின்படி அவரை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். நாங்கள் எடுத்து வரும் சட்ட நகர்வுகளுக்கு இன்னும் உரிய பதில் கிடைக்கவில்லை. எங்களுக்குச் சாதகமான பதில் இந்நேரம் வந்திருக்க வேண்டும். ஆனால், கரோனா விவகாரத்தால் அதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது.
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை இன்னும் செலுத்தாதது ஏன்?
அது ஒரு விஷயமே இல்லை. இன்றைக்குச் சொன்னால் நாளைக்குக் கட்டிவிடப் போகிறோம். ஆனால், இவ்வளவு நாட்களுக்குள் அபராதத்தைக் கட்ட வேண்டும் என்று கோர்ட் எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால், வழக்கில் கைப்பற்றப்பட்டு தற்சமயம் நீதிமன்றத்தின் பொறுப்பில் இருக்கும் சசிகலாவின் நகைகள் மற்றும் சொத்துகளை விற்று அபராதத் தொகைக்காக வரவு வைத்துக் கொள்ளலாம் என்று கோர்ட் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. எனவே, சொத்துகளை விற்று அபராதத்தைச் செலுத்த வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும்தான் இருக்கிறது.
வினய்குமார் கமிஷன் விசாரணையில், சசிகலா சிறையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து மணிக்கணக்கில் பார்வையாளர்களைச் சந்தித்துப் பேசியிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளதும் சிக்கலை உண்டாக்கும் என்கிறார்களே?
வினய்குமார் கமிஷனே சசிகலாவுக்காக அமைக்கப்பட்டதாகத் திட்டமிட்டு செய்திச் பரப்பப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல. சிறையில் நெருக்கடிக்கு உள்ளாகி வரும் கைதிகள் பற்றியும் கைதிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறைக்குள் இருக்கும் கைதிகள் குறித்தும் விசாரித்து அறிக்கை தருவதற்காக அமைக்கப்பட்டதுதான் வினய்குமார் கமிஷன். வினய்குமார் தனது அறிக்கையில், சசிகலா சிறை வளாகத்தை விட்டு வெளியில் சென்று வந்ததாகச் சொல்லப்பட்ட செய்தியைத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
சிறையில் அவர் அதிக நேரம் பார்வையாளர்களைச் சந்தித்துப் பேசியதற்கும் காரணம் இருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவது தொடர்பான வழக்கு, அதிமுக பொதுச்செயலாளர் நீக்கம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு, அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக வெற்றிவேல் தாக்கல் செய்த வழக்கு, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கு, அதன் தொடர்ச்சியாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பிறகு உச்ச நீதிமன்ற பெஞ்சுகளில் தொடரப்பட்ட வழக்குகள், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு என ஏராளமான வழக்குகளில் சசிகலா பதில்சொல்ல வேண்டி இருக்கிறது. அதுபற்றி தனது வழக்கறிஞர்களிடம் பேசுவதற்காக கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது கைதிகளுக்கு சட்டப்படி வழங்கப்படும் உரிமைதான். எனவே, இது சிறை விதிமீறலில் வராது.
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதைக் கர்நாடக சிறைவிதிகள் அனுமதிக்காது என சிறைத் துறை டிஜிபியான இன்ஃபன்ட் அரசுக்கு தெரிவித்துள்ளாராமே?
அவர் அப்படிச் சொல்லி இருந்தால் அது உண்மைக்கு மாறானது. ஏனென்றால், ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்புகள் முன்மாதிரியாக இருக்கின்றன. இப்படியான வழக்குகளில் கர்நாடக சிறைகளில் இருந்தவர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை.
வருமானவரி செலுத்துபவரான சசிகலாவுக்கு இதுவரை சிறையில் முதல் வகுப்பு அளிக்கப்படவில்லை. அதைக் கேட்டுப் பெற்றுத் தருவதற்கு அவரது உறவினர்கள் மெனக்கிடவில்லை என்கிறாரே பெங்களூரு புகழேந்தி?
ஆரம்பத்திலிருந்து அவர்தானே இந்த வழக்கு நடவடிக்கைகளைக் கவனித்தார். சசிகலாவுக்குச் சிறையில் முதல்வகுப்பு தரப்பட வேண்டும் என்பது குறித்து சட்டப்படி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டே இருக்கின்றன. ஆனால், அவருக்கு வழங்கப்படவில்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், மூன்றாண்டு கால சிறைவாசத்தை முடித்து வீட்டுக்கு வரப்போகும் நேரத்தில் இனிமேல் அதைப் பற்றிப் பேசி என்ன ஆகப்போகிறது?
இவ்வாறு ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT