Published : 01 Jul 2020 06:22 PM
Last Updated : 01 Jul 2020 06:22 PM

ராமேசுவரம் அருகே அழகன்குளத்தில் ராஜராஜசோழன் வெளியிட்ட ஈழக்காசு, திருவிதாங்கூர் கால காசுகள் கண்டெடுப்பு

அழகன் குளத்தில் அசோகன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை நாணயங்கள் திருவிதாங்கூர் வெள்ளிக்காசு

ராமேசுவரம் 

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வுகள் மூலம் இவ்வூர் 2400 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த துறைமுகமாகவும், வணிகமையமாகவும் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அழகன்குளத்தில் ஒருவீட்டில் கண்டெடுக்கப்பட்ட காசுகள் மூலம் இவ்வூரின் வெளிநாட்டு வணிகத்தொடர்பு சமீபகாலம் வரை இருந்துள்ளதை நிரூபிக்கிறது.

அழகன்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞருமான அசோகனின் முன்னோர்கள் வெளிநாடுகளில் வணிகம் செய்தவர்கள். அவர் பூர்வீகவீட்டின் பழமையான பெட்டிகளை சுத்தம் செய்தபோது அதில் ஒரு பெட்டியில் பழைய நாணயங்கள் இருந்துள்ளன.

இதில் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த ஈழக்காசு, இந்திய, இலங்கை, இங்கிலாந்து நாட்டு வெள்ளி, செப்புக்காசுகள், திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் எனும் வெள்ளிக் காசு ஆகியவை இதில் முக்கியமானவை.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இக்காசுகள் பற்றிக் கூறியதாவது,

ராஜராஜசோழன் வெளியிட்ட ஈழக்காசு

இங்கு கிடைத்த ஈழக்காசு முதலாம் ராஜராஜசோழன் இலங்கையை வென்ற பிறகு வெளியிட்ட காசு ஆகும். இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்தது ஆகும். இந்த காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, நான்கு பந்துகள் உள்ளன.

அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. திரிசூலம், விளக்கும் உள்ளன. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். தேவநாகரி மொழியில் “ஸ்ரீராஜ ராஜ” என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை போல உள்ளான்.

இலங்கையை சோழர்கள் வென்றபின் அந்நாட்டின் புழக்கத்துக்காக வெளியிடப்பட்ட ஈழக்காசு, முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த காசுகள் பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது.

ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, திருப்புல்லாணி உள்ளிட்ட கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன. தற்போது அழகன் குளம் பகுதிகளிலும் இக்காசுகள் கிடைத்துள்ளதன் மூலம் இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட ஈழக்காசுகள் சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டு பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

திருவிதாங்கூர் பணம்:

திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் எனும் வெள்ளிக்காசின் ஒருபுறம் சங்கும், மறுபுறம் பணம் ஒன் என மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதில் 1096 எனும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கொல்லம் ஆண்டு எனப்படும் மலையாள ஆண்டு ஆகும். இதனுடன் 825 ஐ கூட்டி தற்போதைய ஆண்டு கணக்கிடப்படுகிறது. இக்காசு மூலம்திருநாள் ராமவர்மா என்ற திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் 1921-இல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அம்மன்னரைக் குறிக்க ஆர்.வி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

இலங்கை சதம்:

இலங்கை சதம் காசுகளில் தமிழ், சிங்களத்தில் சதம் என எழுதப்பட்டுள்ளது. இவை 1929 முதல் 1944 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக்காசுகள். இதில் இலங்கையில் அதிகம் காணப்படும் தாளிப்பனை எனும் மரத்தின் படம் உள்ளது. தற்போதும் இலங்கையின் பணத்தாள்களில் தாளிப்பனையின் படம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்டோரியா மகாராணி, ஐந்தாம், ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோர் காலத்தைச் சேர்ந்த வெள்ளி நாணயங்கள், ஏழாம் எட்வர்டு மன்னர் 1909இல் வெளியிட்ட கிரேட் பிரிட்டனில் புழக்கத்தில் இருந்த பென்னி நாணயம் ஆகியவையும் இதில் உள்ளன.

பல நூற்றாண்டுகளாக அழகன்குளத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை, இங்கிலாந்து, திருவிதாங்கூர் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்துள்ளனர் என்பதை இக்காசுகள் மூலம் அறிய முடிகிறது.இதேபோல் இம்மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வே. ராஜகுரு கூறினார்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x