Published : 01 Jul 2020 04:17 PM
Last Updated : 01 Jul 2020 04:17 PM
கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி, லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு எனவும், மாதிரிகள் சேகரிப்பது அவர்களின் அன்றாடப் பணி எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க, கண், மூக்கு, தொண்டை நிபுணர்களையும், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்த வேண்டும் எனவும், லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கக் கூடாது எனவும் உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 1) நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது, தமிழக சுகாதாரத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி, லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு எனவும், மாதிரிகளை சேகரிப்பது அவர்களின் அன்றாடப் பணி எனவும், அதற்கான அடிப்படை தகுதி அவர்களுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற மருத்துவர்களும், மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களும் இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மாதிரிகள் சேகரிக்க மறுப்பதன் மூலம், லேப் டெக்னீஷியன்கள் தங்கள் கடமையை செய்வதில் இருந்து தவறுவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. லேப் டெக்னீஷியன்கள், மனத உடற்கூறியல் படித்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண், மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களும், மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களும் மட்டுமே மாதிரிகளை சேகரிக்க பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறவில்லை என்றும், தற்போது பரிசோதனைகள் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையை சரி செய்ய லேப் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் சாராத பணியாளர்கள் சுயநலமற்ற முறையில் பணியாற்றி வரும் நிலையில், லேப் டெக்னீஷியன்களின் செயல்பாடு கண்டனத்துக்குரியது எனவும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நாளை (ஜூலை 2) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT