Published : 01 Jul 2020 03:59 PM
Last Updated : 01 Jul 2020 03:59 PM
சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய டிஎஸ்பியை புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்ததற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 28-ம் தேதி விசாரணை நடத்தினார். அப்போது, காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என தகவல் வெளியானது.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணைக் கண்காணிப்பாளர் பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், குமார், பிரதாபன் ஆகியோர் ஜூன் 30-ம் தேதி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மேலும், மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் 24 பேரும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குமார் நீலகிரி மாவட்டத்துக்கும், காவல் துணைக் கண்காணிப்பாளர் சி.பிரதாபன் புதுக்கோட்டை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு துணைக் கண்காணிப்பாளராகவும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய அன்றைய தினமே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இத்தகைய இடமாறுதல் தொடர்பாக புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் மாவட்ட அளவிலான அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.
கூட்டத்துக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி தலைமை வகித்தார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் (ஆலங்குடி), திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், மதிமுக மாவட்ட செயலாளர் கே.சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட எதிர்க்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட பிரதாபனை புதுக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம், இவர்களின் பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், வழக்கு முடியும் வரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், இல்லையேல், கூட்டணிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT