Published : 01 Jul 2020 02:08 PM
Last Updated : 01 Jul 2020 02:08 PM
ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் நீதி கிடைக்கத் தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட ரஜினிகாந்துக்கு நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி அமைதியாகவே இருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 1) காலையில், "சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. சத்தியமா விடவே கூடாது" என்று தனது ட்விட்டர் பதிவில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் ட்வீட்டுக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வரும் நிலையில், சிலர் தாமதமாக ட்வீட் செய்துள்ளார் என்று விமர்சனமும் வைத்து வருகிறார்கள். ]
இதனிடையே ரஜினியின் ட்வீட் குறித்து நடிகரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதி கிடைக்கத் தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி.
இதை ‘சின்ன இஷ்யூ’வாக நினைக்கும் மனநிலையை மாற்றிக்கொண்டு, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் சட்டப் பணியில் தங்களை உண்மையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்"
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இந்தப் பதிவுடன் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
இதை ‘சின்ன இஷ்யூ’வாக நினைக்கும் மனநிலையை மாற்றிக்கொண்டு, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் சட்டப் பணியில் தங்களை உண்மையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு @PMOIndia @BJP4India அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
— Udhay (@Udhaystalin) July 1, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT