Published : 01 Jul 2020 12:30 PM
Last Updated : 01 Jul 2020 12:30 PM
காவல் துறைக்கும் - பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ஜெயகுமார் தெரிவித்தார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணை கைதியாக கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட உயர் காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அருண் பாலகோபாலன் கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் மாற்றப்பட்டு, புதிய காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார்.
மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் உள்ளிட்டோரும் பணியிடம் மாறுதல் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாக்கவும், சாலை விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும், குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT