Published : 01 Jul 2020 11:59 AM
Last Updated : 01 Jul 2020 11:59 AM

கரோனா பரவலைத் தடுக்க கோவில்பட்டி தற்காலிக தினசரி சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும்: தமாகா வலியுறுத்தல்

கோவில்பட்டி

கோவில்பட்டி காந்தி மைதானத்தில் செயல்படும் தற்காலிக தினசரி சந்தையை இரண்டாகப் பிரித்து மீண்டும் பள்ளி வளாகங்களுக்கு மாற்றம் வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.பி. ராஜகோபால் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை உள்ள மனு:

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பின் ஒரு பகுதியாக மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை 3 ஆக பிரிக்கப்பட்டு, புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்தன.

இதற்கிடையே, 10-ம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்புகளுக்கான விடுபட்ட பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டதால், பள்ளிகளை தயார்படுத்த வேண்டி, அங்கு செயல்பட்ட தற்காலிக தினசரி சந்தைகள் கோவில்பட்டி செண்பகவல்லியம்மாள் கோயில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இங்கு கிருமி நாசினி முறையாக தெளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இங்கு சமூக இடைவெளி என்பது துளி அளவு கூட இல்லாத நிலையில், கடந்த 28-ம் தேதி தினசரி சந்தையை சேர்ந்த வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் நேற்று முன்தினம் 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

எந்த இடத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறதோ, அந்த இடத்தில் கிருமி நாசினி தெளித்து, அந்த இடத்தை மூட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், காந்தி மைதானத்தில் செயல்படும் தற்காலிக தினசரி சந்தை மூடப்படவில்லை. இடநெருக்கடியான அங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் காய்கறிகள் வாங்க வந்து செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏற்கெனவே கோவில்பட்டி நகரப்பகுதியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், இடநெருக்கடியான இடத்தில் செயல்படும் தற்காலிக சந்தையால் முதியோர், பெண்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், காந்தி மைதானத்தில் செயல்படும் தற்காலிக தினசரி சந்தையை 2 ஆக பிரித்து, மீண்டும் வ.உ.சி. அரசு ஆண்கள் பள்ளி, ஆயிர வைசிய பள்ளி வளாகங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x