Published : 01 Jul 2020 11:39 AM
Last Updated : 01 Jul 2020 11:39 AM
கரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையை உரிய நேரத்தில் கட்டி புதுப்பித்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. வாகன காப்பீடுகளைப் புதுப்பித்துக்கொள்ள அரசு காலக்கெடு கொடுத்தாலும் உரிய நேரத்தில் புதுப்பிக்கத் தவறினால் காப்பீட்டுத் திட்டத்தின் முழு பண பலன்களையும் கோரமுடியாது என எச்சரிக்கிறார்கள் காப்பீட்டுத் துறையில் அனுபவம் கொண்டவர்கள்.
இதுகுறித்து நாகர்கோவிலில் செயல்படும் தனியார் வாகனக் காப்பீட்டு நிறுவனக் கிளை மேலாளர் கதிரேசன் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “பொதுவாகவே 70 சதவீத மக்கள் தங்களது வாகனங்களுக்குக் காப்பீடு செலுத்துவது காவல்துறை சோதனைகளுக்குப் பயந்துதான். வாகனக் காப்பீட்டின் அவசியம் குறித்த புரிதல் அவர்களுக்கு இருப்பதே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை சாலையில் திடீரென காவல்துறை வழிமறித்தால் வாகன காப்பீடு செலுத்திய ஆவணத்தைக் காட்டவேண்டும். அவ்வளவுதான். மீதமுள்ள 30 சதவீத மக்கள்தான் எனது வாகனம்; எனது பாதுகாப்பு என்னும் புரிதலோடு வாகனக் காப்பீடு செய்கின்றனர்.
அரசும், காவல்துறையும் இப்போது கரோனா ஒழிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவதால் வாகனக் காப்பீட்டுச் சோதனை குறைந்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் பலரிடமும் வாகனக் காப்பீடு கட்டுவதில் மெத்தனம் எழுந்துள்ளது. வாகனக் காப்பீடு நம்மையும், நம்மால் சாலைவிபத்தில் பாதிக்கப்படுவோரையும் காக்கும் ஆயுதம் என்னும் புரிதல் பலருக்கு இல்லாததே இதற்குக் காரணம்.
வாகனக் காப்பீட்டைப் பொறுத்தவரை நாம் வாகனத்தை ஓட்டும்போது மூன்றாவது நபரையோ, பொதுச்சொத்தையோ சேதப்படுத்தினாலும்கூட வாகன காப்பீடு துணைக்கு வரும். நம்மால் விபத்து ஏற்பட்டு மற்றொருவருக்கு உயிர் இழப்பு ஏற்பட்டுவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும். பாதிக்கப்பட்டவரின் வயது, அவரது வருமானம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இழப்பீடு கேட்பார்கள்.
வாகன ஓட்டி இன்சூரன்ஸ் தவணை கட்டியிருந்தால் அவரால் ஏற்பட்ட சேதத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு கட்டும். அண்மையில் நாகர்கோவிலில் ஒரு விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று ரூ.1.25 கோடி இழப்பீடு கொடுத்தது. அதே இன்சூரன்ஸ் எடுக்காத தனிநபர் இந்த இழப்பீட்டை எப்படிக் கொடுப்பார்? அதனால்தான் வாகனக் காப்பீடு அவசியம் என தொடர்ந்து பேசிவருகிறோம். பைக்கோ, காரோ ஓடுவதற்குப் பெட்ரோலோ, டீசலோ எவ்வளவு முக்கியமோ அதற்கு இணையாக வாகனக் காப்பீடும் முக்கியம் என்னும் புரிதல் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.
இந்த கரோனா காலத்தில் டூவீலர் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனக் காப்பீட்டைப் புதுப்பித்துக்கொள்வது பாதியாகக் குறைந்திருக்கிறது. அதேநேரம் ஆட்டோ, டாக்சி, சுமையுந்து ஆட்டோ, வாடகைக்கார், வேன் ஓட்டுபவர்களின் வாகனக் காப்பீட்டை உரிய நேரத்தில் புதுப்பித்துக் கொள்பவர்கள் வெறும் 20 சதவீதம் பேரே உள்ளனர். வாகனக் காப்பீடு காலாவதி ஆகியிருந்தாலும் அதை புதுப்பித்துக்கொள்ள ஜூலை 31 வரை கெடுவை நீட்டித்திருக்கிறது அரசு.
கெடுவை அரசு நீட்டித்திருப்பது மக்களை இந்த சூழலில் நெருக்குதலுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதால்தான். அதேநேரம் இப்போதைய சூழலில் காப்பீட்டைப் புதுப்பிக்காத பட்சத்திலும் வீட்டிலோ, பார்க்கிங் பகுதியிலோ வாகனம் திருடு போனாலோ, தீ விபத்து அல்லது தனிப்பட்ட விபத்துக்கு உள்ளானாலோ காப்பீடு மூலம் இழப்பீடு கோர முடியாது.
பொதுமுடக்கம் தொடரும் நிலையில் முறையான இ பாஸ் இல்லாமல் வெளியில் வாகனத்தைக் கொண்டு வந்து மற்றொரு நபருக்கோ, வாகனத்துக்கோ, பொதுச் சொத்துக்கோ சேதம் விளைவித்தால் காப்பீடு கைகொடுக்காது. வாகனக் காப்பீட்டை உரிய காலத்தில் புதுப்பித்தால் மட்டுமே அதன் முழுப் பயன்களையும் தரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT