Published : 30 Jun 2020 06:59 PM
Last Updated : 30 Jun 2020 06:59 PM

உதயநிதியை இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடி செல்ல அனுமதித்த அனைவரையும் சஸ்பெண்ட் செய்யவேண்டும்!- அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அதிரடி

“இ-பாஸ் இல்லாமல் உதயநிதி ஸ்டாலினை தூத்துக்குடி செல்ல அனுமதித்திருந்தால் அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்வதில் எந்தத் தவறும் இல்லை” என அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ’இந்து தமிழ்’ இணையத்துக்குப் புகழேந்தி அளித்த பிரத்யேகப் பேட்டி:

கரோனாவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆரம்பத்திருலிருந்தே தான் சொல்லிவரும் யோசனைகளைக் கேட்காமல் உதாசீனப்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களைத் தற்போது நெருக்கடியான கட்டத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறாரே?

பொறுப்புள்ள ஒரு எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினால் தாராளமாகக் கேட்கலாம். ஆனால், இக்கட்டான இந்த நேரத்திலும் அநாகரிக அரசியல் அல்லவா நடத்துகிறார்? எட்டுக் கோடி மக்களுக்கும் முதல்வர் என்றுகூடப் பாராமல், ‘முதுகெலும்பில்லாதவர், திராணியற்றவர், வக்கற்றவர்’ என்றெல்லாம் முதல்வரை மிகவும் தரம்தாழ்ந்து விமர்சிக்கிறார் ஸ்டாலின். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நான் ஸ்டாலினைக் கேட்கிறேன்; இந்தக் கரோனா எப்போது முற்றாக ஒழியும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? சென்னை லாக்டவுனை முடிவுக்குக் கொண்டுவர உங்களிடம் ஆக்கபூர்வமான யோசனைகள் ஏதும் உண்டா? அப்படியான யோசனைகள் உங்களிடம் இல்லை என்று எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன். முடிந்தால் உங்களிடம் இருக்கும் திமுக தொண்டர்களைச் சென்னையில் தெருவுக்கு தெரு நிறுத்தி, மக்களை வீட்டைவிட்டு வெளியே வராமல் பார்த்துக் கொள்ளச்சொல்லுங்கள். கரோனா பெருமளவுக்குக் கட்டுக்குள் வந்துவிடும். எங்களுக்கும் அது பேருதவியாக இருக்கும்.

கரோனா களத்தில் அனைத்து மாநிலங்களிலுமே ஆளும் கட்சிகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஸ்டாலின் வரம்புமீறி முதல்வரை வாய்க்கு வந்தபடி பேசுவதுதான் வேதனையளிக்கிறது. இவரை ஒப்பிடுகையில் கனிமொழியும் மு.க.அழகிரியும் மிகவும் நாகரிகமாகப் பேசுகிறார்கள். எப்படி அரசியல் நாகரிகத்துடன் பேசுவது என்பதை அவர்களிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் ஸ்டாலின்.

அப்படியானால் அதிமுக அரசு கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் சரியான பாதையில்தான் செல்கிறது என்கிறீர்களா?

நிச்சயமாக. அரசு இந்த விவகாரத்தில் மிகச் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தில்தான் தினமும் அதிகமான நபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இங்குதான் இறப்புகளின் எண்ணிக்கையும் குறைவு. எந்த மாநிலத்திலும் வீடு வீடாய்ச் சென்று கரோனா சோதனை நடத்தப்படவில்லை. தமிழகம் அதைச் செய்துகொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், கடுமையான நிதி நெருக்கடியிலும் மக்களைப் பட்டினியில்லாமல் காத்து வருகிறார் தமிழக முதல்வர். அம்மா உணவகம் போன்ற ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் தோற்றுவிட்டன. ஆனால், இங்கே நாம் வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தினமும் சுமார் 7 லட்சம் பேருக்கு அரசின் சார்பில் இலவசமாக உணவளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் மத்திய அரசு தரும் தானியங்களைத் தவிர ரேஷனில் இலவசமாகத் தானியங்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால், நாம் இலவச அரிசி வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

மற்றவர்கள் சொல்வது போல் கரோனா தொற்றால் ஒட்டுமொத்த சென்னையும் பற்றியெரியவில்லை. சென்னையில் இருக்கும் 40 ஆயிரம் தெருக்களில் 6 ஆயிரம் தெருக்களில் மட்டும்தான் கரோனா தொற்றாளர்கள் இருக்கிறார்கள். அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடக் கூடாது என்பதற்காகத்தான் லாக்டவுன் போட்டு மக்களைக் காத்து வருகிறோம்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடி சென்றது விதிமீறல் இல்லையா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி இருக்கிறாரே?

உண்மைதான். சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை பல இடங்களில் சுங்கச்சாவடிகளும் போலீஸ் விசாரணை முகாம்களும் இருக்கின்றன. அத்தனையையும் கடந்து, அதுவும் முறையான இ-பாஸ் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி சென்றிருப்பாரேயானால் அவரை அனுமதித்த அதிகாரிகள் அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்வதில் தவறே கிடையாது. இதை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். அண்மையில், ‘சசிகலா ஆகஸ்ட் 14-ல் விடுதலை ஆகிறார்’ என்று பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரியின் பெயரில் ட்விட்டரில் வந்த செய்தி உண்மைதானா?
சசிகலாவுக்கு நாம்தான் பிணை கொடுத்தோம். நான்தான் அவர்களைச் சரண்டர் செய்தேன். ஒரு காலத்தில் சிறையில் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாம்தான் செய்து கொடுத்தோம். இதையெல்லாம் நான் மறுக்கவில்லை.

பெண்மணி ஒருவர் சிறையில் இருக்கிறார் என்ற மனிதாபிமானத்துடன், அவர் விடுதலையாவதை நான் எதிர்க்கவில்லை; விமர்சிக்கவில்லை. ஆனால், ஆச்சாரி சொல்வது போல் ஆகஸ்ட்டில் அவர் விடுதலையாக வாய்ப்பே இல்லை. சசிகலா சிறை விதிகளை மீறியதாக கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபா ஐபிஎஸ் கொடுத்த புகாரின் பேரில் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி வினய் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

வினய் கமிஷன் விசாரணையில், பார்வையாளர்கள் சந்திப்பின்போது சிறை விதிகள் அனுமதிக்கும் 45 நிமிடக் கால அவகாசத்தையும் கடந்து மணிக்கணக்கில் பலரிடம் பேசியிருக்கிறார் சசிகலா என்பது உறுதியாகிவிட்டது. இதையே கர்நாடக அரசுக்கு அறிக்கையாகத் தாக்கல் செய்துவிட்டார் வினய்.

இந்த அறிக்கை குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறது. சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கைதிக்கான சலுகைகளைப் பெறுவதற்கான தகுதி இருந்தும் அவரது உறவுகள் அவருக்கு அந்தச் சலுகைகளைப் பெற்றுத் தர ஏனோ முயற்சிக்கவில்லை. அந்தச் சலுகையை பெற்றுத் தந்திருந்தாலே வினய் கமிஷனின் குற்றச்சாட்டுக்கே அவசியமில்லாமல் போயிருக்கும்.

அதேபோல், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையும் இன்னும் செலுத்தப்படாமல் இருக்கிறது. இனிமேல் அதைச் செலுத்தினாலும் இத்தனை நாட்கள் கழித்துச் செலுத்துவது ஏன்... இதை ஏற்கலாமா கூடாதா? என்ற சர்ச்சைகள் எழுப்பப்படலாம். அதுவுமில்லாமல், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட நபர்களை முன்கூட்டியே விடுதலை செய்யச் சட்டத்தில் இடமில்லை என கர்நாடக சிறைத்துறை டிஜிபியான இன்ஃபன்ட் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். எனவே சசிகலா ஆகஸ்ட்டில் விடுதலையாவர் என்பது விளம்பரத்துக்காக கிளப்பப்பட்ட புரளியே தவிர வேறொன்றும் இல்லை.

அப்படியானால் அவரது விடுதலை எப்போது இருக்கும்?

ஏற்கெனவே 21 நாட்கள் சசிகலா சிறையில் இருந்திருக்கிறார். அதைக் கழித்து, எல்லாம் சரியாக இருந்து சிறை விதிகள் அனைத்தும் முழுமையாக பூர்த்தியானால் 2021 ஜனவரியில் அவர் விடுதலையாகலாம்.

‘விடுதலையானால் அதிமுகவில் என்ன நடக்கும்?’ என்று அடுத்த கேள்வியை நீங்கள் கேட்டீர்களானால், ‘சசிகலாவுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ அதிமுகவில் இனி வேலை இல்லை’ என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதுதான் எனது பதிலும்.

இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x