Published : 30 Jun 2020 06:05 PM
Last Updated : 30 Jun 2020 06:05 PM
மதுரையில் கடந்த 10 நாட்களில் 1,807 பேருக்கு புதிதாக ‘கரோனா’ பரவியதால் அரசு ராஜாஜி மருத்துவமனை ‘கரோனா’ வார்டுகள் ‘ஹவுஸ் புல்’ ஆகிவிட்டதால் தீவிர பாதிப்புடன் வரும் ‘கரோனா’ நோயாளிகள் சிகிச்சைப்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை அடுத்து மதுரையில் ‘கரோனா’ தொற்று நோய் வேகமாகப் பரவுகிறது. தினமும் 300-க்கும் மேற்பட்டோர் ‘கரோனா’வால் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 18-ம் தேதி வரை மாவட்டத்தில் 495 பேர் மட்டுமே இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 19-ம் தேதி முதல் தொற்று பரவல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 10 நாட்களில் 1,807 பேருக்கு ‘கரோனா’ தொற்று பரவியுள்ளது. இதில், மாநகராட்சிப்பகுதியில்தான் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிகக் குறுகிய காலத்தில் தொற்று பரவல் விகிதம் அதிகரித்துள்ளதால் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதேபோல், கடந்த 2 வாரத்திற்கு முன் வரை உயிரிழப்பு மிக அரிதாகவே இருந்தது. ஆனால், தற்போது தினமும் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழக்கின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ‘கரோனா’ வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 150 படுக்கை வசதி கொண்டு ஐசியூ வார்டு உள்பட மொத்தம் 650 படுக்கை வசதி உள்ளது. இதுதவிர, மதுரை அருகே உள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனை, மதுரை வேளாண்மை கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி உள்பட மொத்தம் 2,500 பேர் சிகிச்சை பெற ‘கரோனா’ வார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நோயாளிகளுக்கு முன்போன்ற கவனிப்பும், சிகிச்சையும் கிடைப்பதில்லை. சாப்பாடு கூட சரியாக நேரத்திற்கு கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வருகின்றன.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘கரோனா’ வார்டில் அனைத்து அறிகுறிகளுடன் தீவிர பாதிப்புள்ள நோயாளிகள் ஐசியூ வார்டிலும், மிதமான பாதிப்புள்ள நோயாளிகள், முதியவர்கள் மீதமுள்ள 500 படுக்கைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது அரசு மருத்துவமனையில் உள்ள வார்டில் நோயாளிகள் நிரம்பியுள்ளனர். அதனால், தீவிர பாதிப்புள்ள நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் மட்டுமே 150 படுக்கைகளில் தீவிர பாதிப்புள்ள நோயாளிககள் சிகிச்சைப்பெறுவதற்கு ஆக்ஸிஜன் வசதி உள்ளது. தற்போது தோப்பூர் காசநோய் மருத்துவமனை முழுமையாக கரோனா’ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை மதுரையில் இருந்து தொலைவில் உள்ளதால் அவசரத்திற்கு நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை செய்ய முடியாது என்பதால் நோய் அறிகுறி இல்லாத 50 வயதிற்கு கீழான நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது இந்த மருத்துவமனையில் உள்ள 200 படுக்கைகளிலும் தீவிர பாதிப்பு நோயாளிகள் சிகிச்சைப்பெறக்கூடிய வகையில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. ஒரிரு நாட்களில் இங்கு தீவிர பாதிப்புள்ள நோயாளிகள் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் அவர்கள் குணமடைந்து வீட்டிற்கு செல்வதும் அதிகரித்துள்ளது. அதனால், தற்போது போதுமான படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்படுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT