Published : 30 Jun 2020 06:23 PM
Last Updated : 30 Jun 2020 06:23 PM

சாத்தான்குளம் சம்பவம்: உயர் நீதிமன்ற விசாரணையில் நம்பிக்கை அறிகுறிகள் தெரிகின்றன: கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

உயர் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டால்தான் சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கை:

"சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்குமா என்கிற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இத்தகைய சூழலில் சாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு நீதி கிடைப்பதற்கான நம்பிக்கை ஊட்டக்கூடிய அறிகுறிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் விசாரணையில் தெரிகின்றன.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், 'சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருந்ததும், இந்திய தண்டனை சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும் முகாந்திரம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், சாத்தான்குளத்தில் இந்த வழக்கு விசாரணையை நிகழ்த்திவரும் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் பாரதிதாசனுக்கு ஒத்துழைப்பதற்காக நியமிக்கப்பட்ட இரு காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் காவலர் மகாராஜன் என்பவர் இழிவுபடுத்துகிற வகையில் ஒருமையில் பேசியதாக உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் புகார் அளித்துள்ளார். இந்த நிகழ்வுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட இரு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் இவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கைப் பொறுத்தவரை காவல் நிலையத்தில் நிகழ்ந்த கொடூரத் தாக்குதல்கள் குறித்து சாட்சியளித்த காவலர் ரேவதி மிகவும் அச்சம் பீதியுடன் காணப்பட்டதாக நீதித்துறையின் நடுவர் அறிக்கை குறிப்பிட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் தடயங்கள் அழிக்கப்படவும், சாட்சியங்கள் அச்சுறுத்தப்படவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருவதால் நியாயமான விசாரணை நடைபெறுமா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.

முதல் நிலை பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடலில் அதிக காயங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் இந்த வழக்கைப் பொறுத்தவரை எந்தத் தாமதமும் இல்லாமல் ஒரு நொடிகூட வீணாக்கக்கூடாது என்று கூறி உடனடியாக இந்த வழக்கின் விசாரணையை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளே சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய பிறகும்கூட தமிழக அரசும், காவல்துறையும் அலட்சியப் போக்கோடு நடந்துகொள்ளுமேயானால் எதிர்காலத்தில் மிகப்பெரிய விலையை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

எனவே, சிபிஐ விசாரணை உடனடியாகத் தொடங்காத நிலையில், குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளின் கண்காணிப்பில் நேர்மையும், திறமையும் மிக்க உயர் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டால் தான் சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கிடைக்கும்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x