Last Updated : 30 Jun, 2020 03:03 PM

 

Published : 30 Jun 2020 03:03 PM
Last Updated : 30 Jun 2020 03:03 PM

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூம் செயலி மூலம் புகார் அளிக்க ஏற்பாடு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஜூம் செயலி மூலம் புகார் அளிக்க வந்தவரைச் சந்தித்து விசாரிக்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார். | படம் : ஜெ.மனோகரன்.

கோவை

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூம் செயலி மூலம் புகார் அளிக்க வருபவர்களிடம் விசாரிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டது.

கோவை ஸ்டேட் பேங்க் சாலை எனப்படும் ரயில் நிலையம் சாலையில், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளரின் தனி ஆய்வாளர் ஆகியோரது அலுவலகங்களும், மாவட்ட குற்றப்பிரிவு, சைபர் கிரைம், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு, தொடர் குற்றத் தடுப்புப் பிரிவு, சமூக நீதிப் பிரிவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் அலுவலகங்கள், அமைச்சுப் பணியாளர்களின் அலுவலகங்கள் உள்ளன.

பலவிதப் புகார்கள் தொடர்பாக காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்துப் புகார் அளிக்க தினசரி ஏராளமான பொதுமக்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். தவிர, மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் பலவித காரணங்களுக்காக, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தினசரி வந்து செல்கின்றனர்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வருபவர்களின் எண்ணிக்கை தினசரி சீரான முறையில் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என முன்னரே வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிப்பதற்குப் பதிலாக, ஜூம் செயலி மூலம் சந்தித்துப் புகார் அளிக்கும் திட்டம் இன்று (ஜூன் 30), மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கியது. இதற்காக இந்த அலுவலகத்தின் தரைத்தளத்தில் பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு மேஜை, இருக்கை போடப்பட்டது. மேஜை மீது மடிக்கணினியை வைத்து, அதில் ஜூம் செயலியைப் பதிவிறக்கம் செய்து, முதல் தளத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அறையில் உள்ள மடிக்கணினியுடன் இணைக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, முதல் நபராக பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், நில மோசடி விவகாரம் தொடர்பாக புகார் அளிக்க காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இன்று வந்தார். அவரை ஜூம் செயலி மூலம் சந்தித்து காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் விசாரணை நடத்தினார். பின்னர், அவரது புகார் மனுவை காவலர்கள் வாங்கிக் கொண்டு, விசாரித்து சம்பந்தப்பட்ட காவல் பிரிவில் இருந்து தொடர் விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள் எனக்கூறி அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறும்போது, "ஜூம் செயலி மூலம் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் அளிக்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. தேவைப்படும் பட்சத்தில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அதேசமயம் காவல் நிலையங்களில் தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்து ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் புகார் மனுக்களை நேரடியாகப் பெற்று விசாரித்து வருகின்றனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x