Published : 30 Jun 2020 01:17 PM
Last Updated : 30 Jun 2020 01:17 PM
தூத்துக்குடி சாத்தான்குளம் விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான எஸ்.பி. அருண்பாலகோபாலன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் புதிய எஸ்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு மண்டல டிஐஜி சண்முகராஜேஷ்வரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுவதால் அவருக்குப் பதில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜி முருகன், தெற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய அளவில் ராகுல் காந்தி முதல் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் இவ்விவகாரத்தில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய கோரிக்கை வலுத்துவந்தது.
இந்நிலையில் சேலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அறிவித்தார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்ற குற்றவியல் நடுவர் பாரதிதாசனை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து எஸ்.பி.பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
எஸ்.பி. அருண்பாலகோபாலன் இந்தச் சம்பவத்தைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் எஸ்.பி. அருண்பாலகோபாலன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்.பி.யாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயக்குமார் குரூப்-1 மூலம் தேர்வான அதிகாரி. பின்னர் ஐபிஎஸ் தகுதி பெற்றார். அதிக அனுபவம் பெற்றவர். சென்னை காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பதவி வகித்தவர், பின்னர் விழுப்புரம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தூத்துக்குடியில் அனுபவம் வாய்ந்த எஸ்.பி. ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்கிற அடிப்படையில் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தெற்கு மண்டல டிஐஜி சண்முகராஜேஷ்வரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுவதால் அவருக்குப் பதில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜி முருகன், தெற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முருகன் ஏற்கெனவே தி.நகர் துணை ஆணையர், விழுப்புரம் டிஐஜி, நெல்லை டிஐஜி, தெற்கு மண்டல ஐஜி, நெல்லை காவல் ஆணையர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றியவர். சிபிஐயில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாகப் பதவி வகித்த அவர் பின்னர் குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக பதவி வகித்து வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT