Published : 30 Jun 2020 12:33 PM
Last Updated : 30 Jun 2020 12:33 PM
சாத்தான்குளம் விவகாரத்தில் தவறு செய்த சில காவலர்களைப் பாதுகாக்க ஒட்டுமொத்த காவல்துறையையும் கொச்சைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. விசாரணைக்குச் சென்ற நீதிபதியை மிரட்டும் அளவுக்கு நிலை உள்ளது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
சாத்தான்குளம் வழக்கு விவகாரத்தில் விசாரணைக்குச் சென்ற குற்றவியல் நடுவரையே மிரட்டியதாக அவர் புகார் அளித்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் காவல் உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், சிபிஐக்கு மாற்றும் இடைப்பட்ட காலத்தில் டிஐஜி தலைமையில் விசாரணை அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றலாமா என உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கூறியதாவது:
“தொடர்ந்து அரசு அங்கு நடந்துள்ள விஷயங்களை மூடி மறைக்கக்கூடியவர்களுக்கு உறுதுணையாக உள்ளது. தவறுசெய்த சில போலீஸாரைப் பாதுகாக்க ஒட்டுமொத்தக் காவலர்களையும் கொச்சைப்படுத்தக்கூடிய அளவில் அரசு செயல்படுகிறது.
தடயங்களை அழிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார்கள், இருவரையும் தாக்கிய லத்தியைக் கேட்டபோது தரவில்லை, என்னையும் மிரட்டினார்கள் என நீதிபதி புகாரளிக்கும் வகையில் நிலை உள்ளது.
காயங்கள் அந்த அளவுக்கு உள்ளன. வன்முறையால் கொலை நடந்துள்ளதா? ஏனென்றால் போலீஸார் அழைத்தபோது அவர்கள் எந்தவித எதிர்ப்புமின்றி சென்றுள்ளனர். ஆகவே, என்ன நடந்தது என்பது குறித்து மக்களுக்கும் தெரிய வேண்டும். அவர்கள் குடும்பத்தாருக்கும் தெரியவேண்டும். இனி இதுபோன்று நடக்கக்கூடாது''.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT