Published : 30 Jun 2020 12:24 PM
Last Updated : 30 Jun 2020 12:24 PM
புதுச்சேரி நகரெங்கும் காவல்துறையினர் அபராதம் விதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், முதல்வர் நாராயணசாமியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் போலீஸாருக்கு மாறுபட்ட உத்தரவுகளைத் தருவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
கரோனா ஊரடங்கால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் பணிக்குச் சென்றால்தான் சாப்பாடு என்ற சூழலில் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், புதுச்சேரியில் காலையிலேயே ஏராளமான இடங்களில் போலீஸார் நின்றபடி மக்களைக் கட்டுப்படுத்துவதாக கூறி, அபராதத்தை விதிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். குறிப்பாக, தனிமனித இடைவெளி இல்லை, எச்சில் துப்புதல், முகக்கவசம் அணியவில்லை எனப் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்கின்றனர். தற்போது பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதால் இதர பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்கின்றனர்.
முக்கியமாக, இருசக்கர வாகனத்தில் வருவோரைக் குறிவைத்து வசூலிக்கின்றனர். குறிப்பாக, உள்ளாட்சித்துறை விதிக்க வேண்டிய அபராதத்தை காவல்துறை கையில் வைத்துக்கொண்டு அபராதம் விதிக்கின்றனர். அத்துடன் ஓட்டுநர் உரிமம், காப்பீடு இல்லாவிட்டாலும் இம்முறையில்தான் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதனால், கரோனா காலத்தில் கடும் அதிருப்தியில் மக்கள் உள்ளனர்.
பல்வேறு தொகுதி எம்எல்ஏக்களும் மக்களும் முதல்வரிடம் நேரடியாகப் புகார் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி, "காவல்துறை, வருவாய், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். வேறு வேலை எல்லாம் விட்டுவி்ட்டு நூற்றுக்கணக்கானோரை ஒரே இடத்தில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் காவல்துறையினர் நிறுத்திப் பரிசோதிப்பது ஆபத்தானது. காவல்துறையினர் மக்களுக்கு நண்பராக இருக்க வேண்டும். விரோதியாக இருக்கக்கூடாது. மக்களுக்குத் தொல்லை தருவதை நிறுத்த வேண்டும்" என்று நேற்று (ஜூன் 29) மாலை அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காவல் நிலையங்கள் வாரியாக பதிவான வழக்குகளைப் பார்த்து இன்று (ஜூன் 30) குறைபட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட செய்தியில், "காவல்துறையினர் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்துவதையும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதையும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். வெளியில் வருவோர் மீதான வழக்கு, விசாரணையில் எந்தத் தளர்வும் அளிக்கக் கூடாது. நீங்கள் வழக்குப்பதிவு மூலமாகத்தான் சட்டத்தின் மீதான மரியாதை இருக்கும். மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இதனால், நமது சுகாதார அமைப்பு, மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களின் அழுத்தம் குறையும். மக்கள் முகக்கவசங்களை அணிந்திருந்தாலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதை உறுதி செய்துகொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டும். 'ஆரோக்கிய சேது' செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர், துணைநிலை ஆளுநரும் மாற்றி, மாற்றி காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிப்பதால் பாதிக்கப்படுவோர் மக்கள்தான்.
இது தொடர்பாக அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், "கரோனா சம்பந்தமாக பல்வேறு சட்ட திட்டங்களை அறிவித்த முதல்வரின் அறிவிப்பால், பொதுமக்கள் பல தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். நம் முதல்வரே எல்லாவற்றுக்கும் அபராதத் தொகையை அறிவித்துவிட்டு, அவரே மாற்றி மாற்றிப் பேசி வருகிறார். காவல்துறைக்கு முதல்வர் அமைச்சரா? அல்லது துணைநிலை ஆளுநர் அமைச்சரா? எனக் கேள்வி கேட்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்" என்று தெரிவிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT