Published : 30 Jun 2020 07:11 AM
Last Updated : 30 Jun 2020 07:11 AM
திருப்பத்தூரில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலக கட்டிடங்கள் கட்ட முதற்கட்டமாக ரூ.109.71 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. இந்நிலையில், புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன.
மாவட்ட வனத் துறைக்கு சொந்தமான காலி இடத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த இடத்தை ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கய்யா பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, பொதுப்பணித் துறை, சமூக நலத்துறை, தேர்தல் பிரிவு உள்ளிட்ட முக்கிய அரசுத் துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2020-21-ம் நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ.109.71 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதைக் கொண்டு சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பில் 8 மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் முறையாக டெண்டர் விடப்பட்டு விரைவில் தொடங்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT