Published : 29 Jun 2020 08:52 PM
Last Updated : 29 Jun 2020 08:52 PM
ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 6-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.
அதே நேரத்தில், அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்டெடுத்தும் தொழில் வளத்தைப் பெருக்க புதிய திட்டங்களைச் செயல்படுத்தியும் வருகின்றது.
இந்தியா முழுவதும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30.6.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
அதே சமயம், ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், கட்டிடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு அரிசி போன்ற பொருட்களைக் கூடுதலாக வழங்கியும், அனைத்து 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரியத் தொழிலாளர்களைச் சேர்த்து 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே தலா 1,000 ரூபாய் வழங்கியதைப் போல், மீண்டும் தலா 1,000 ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
29.6.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால் தான், கரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்புக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நோய்த் தடுப்புப் பணிகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளைத் தெரிவித்தார்கள்.
பல்வேறு தினங்களில் முதல்வர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 22.6.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கைத் தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், 29.6.2020 அன்று பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
எனினும் முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்.
செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் 19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல் படுத்திய முழு ஊரடங்கு, கரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் 5.7.2020 வரை தொடரும்.
19.6.2020க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12 மணிவரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12 மணிவரை தொடரும்.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் மற்றும் முட்டை விற்பனைக் கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-
நகர்ப்புற வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
வணிக வளாகங்கள் (Shopping Malls)· பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் திறக்கத் தடை. எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.
மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
* மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.
* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள்,
* கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள்,
* அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு,
* கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துப் போக்குவரத்து
மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்படும்.
முழு ஊரடங்கு:
5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்
* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
பொது பேருந்து போக்குவரத்து :
* மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொதுப் பேருந்துப் போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இ-பாஸ் முறை :
* அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
* வெளி மாநிலங்களுக்குச் சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
* முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவை இல்லை.
* ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளைச் சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.
பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் 6.7.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீதப் பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதைத் தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர்சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
* உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
* தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
* தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம்.
* ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.
* முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள், மற்ற இறைச்சிக் கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
i. கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப் பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
ii. தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
iii. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.
* அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
* தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
* உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.
* தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
* அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.
* மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள், மற்ற இறைச்சிக் கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
பொது · குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
* தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
* அனைத்துத் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
* முழு ஊரடங்கு 5.7.2020 வரை அமலில் இருக்கும் பெருநகர சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் உள்ள தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறை அதாவது, தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுப் பணிபுரிய அனுமதிக்கும் நடைமுறை தொடர்வதற்கும் மற்ற பகுதிகளில் தற்போதுள்ள முறை தொடர்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்ட பகுதிகளைத் தவிர்த்து மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள்/ நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்/ பணியாளர்கள், அருகாமையில், அதாவது, அந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திலிருந்து வந்து பணிபுரிய, தொழிற்சாலை/நிறுவனம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து அனுமதி பெற்று, தொழிலாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கலாம். இந்த அனுமதி அட்டை,
தொழிற்சாலை/ நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். பிற மாவட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.
சென்னை பெருநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சிறப்பு நடவடிக்கைகள்
சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுவதுடன், நோய்த் தடுப்புப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், சத்தான உணவு போன்றவை வழங்கப்படுகிறது.
அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள 149 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் செயல்படுவதுடன், 4,925 காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.
இதனால் 19.6.2020 முதல் 3,36,836 நபர்கள் காய்ச்சல் சோதனையில் பங்குகொண்டு அவர்களில் 15,119 நபர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டது. இவர்களில் 3,189 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு தவிர்க்கப்படுகின்றது. இதேபோன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், நோய்த்தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் உள்ள ஏழைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும், கரோனா நோய்த் தொற்றுடன் ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய் போன்ற நோய் உள்ளவர்கள் இந்நோய்த் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இப்பகுதியில் வாழும் ஏழைகளின் வாழ்விடங்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் அமைந்துள்ளன.
எனவே, ஒரு முக்கிய நோய்ப் பரவல் தடுப்புப் பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள்தோறும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களைத் தனிமைப்படுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாட்களாவது தங்கவைத்து, அவர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற ஒரு முக்கிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு முன்னெச்சரிக்கையாக 8,072 நபர்கள் தனிமை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
மதுரை பெருநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இதுவரை 931 முகாம்கள் நடத்தப்பட்டு 75,252 நபர்கள் காய்ச்சல் சோதனையில் பங்குகொண்டு 8,720 நபர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 1,389 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய்ப் பரவலைத் தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்திக் கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
அரசு அமல்படுத்திவரும் ஊரடங்கு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்று அதிகரிப்பதால் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதனால் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும். எனவே, பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT