Published : 29 Jun 2020 08:06 PM
Last Updated : 29 Jun 2020 08:06 PM
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் ஆகியோர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை எடுத்துள்ளது..
நாளை காலை மூவரும் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில்," கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மின்னஞ்சல் வழியாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது சாத்தான்குளம் காவல் நிலையம் முழுக்கமுழுக்க தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபம் ஆகியோரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காததுடன் அது தொடர்பான ஆவணங்களையும் வழங்கவில்லை. நீதித்துறை நடுவர் விசாரித்ததை காவலர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். சாத்தான்குளம் காவலர் மகாராஜன் என்பவர் நீதித்துறை நடுவரிடம் மரியாதை குறைவான ஏளமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது".
ஆகவே நீதிமன்றம் தானாக முன்வந்து மூவர் மீதும் நீதிமன்ற குற்றவியல் அவமதிப்பு வழக்கினை தொடுகிறது. மூவரையும் பணியிடமாற்றம் செய்தால் மட்டுமே விசாரணை எவ்வித இடையூறுமின்றி நடைபெறும்.
ஆகவே அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிராதபன், காவலர் மகாராஜன் ஆகிய மூவரும் நாளை காலை பத்து முப்பது மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT