Published : 29 Jun 2020 06:54 PM
Last Updated : 29 Jun 2020 06:54 PM
கரோனா ஏற்படுத்தி இருக்கும் இக்கட்டான சூழலுக்கு மத்தியில் வங்கிகளில் வீடு, வாகனம், தனிநபர் கடன் பெற்று மாதத் தவணை செலுத்துபவர்களுக்கு 6 மாத காலத்துக்குத் தவணைத் தொகை கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துக் கடன் பெற்றோருக்கும் சில சலுகைகளை அந்தந்த வங்கியினரே அளித்து வருகின்றனர்.
வங்கியில் கடன் பெற்று அதன் மூலம் தங்கள் தேவையை நிறைவேற்றி மாதாந்திர தவணைத் தொகை செலுத்துபவர்களுக்கு இணையாக நகைகளை அடகுவைத்துப் பணம் பெறுபவர்களும் இருக்கிறார்கள். அதிலும் பொதுத்துறை வங்கிகளில் வட்டி குறைவாக இருப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் அதிகமான அளவுக்கு நகைக்கடன் எடுக்கின்றனர். இந்நிலையில் இப்போது கரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகைக்கடனிலும் சில சலுகைகளை ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலோடு பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த பொதுத் துறை வங்கிப் பணியாளர் சுந்தர் கூறும்போது, “நகைக் கடன்களைப் பொறுத்தவரை ஓராண்டுக்குள் திருப்ப வேண்டும். அப்படி திருப்ப முடியாதவர்கள் உரிய வட்டியைச் செலுத்தி, நகைகளை மீட்டு மீண்டும் அடகு வைக்கலாம் என்பது வங்கித்துறையில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. அப்படித் திருப்பி வைக்காவிட்டால் ஓராண்டு முடிவில் வட்டி விகிதம் மாறுபடும். முன்பு கட்டியதைவிடக் கூடுதலாக வட்டி வரும். இப்போது கரோனாவால் மக்களிடம் பணப் புழக்கம் குறைந்திருக்கிறது. வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இதனால் வீட்டில் இருக்கும் நகைகளைக் கொண்டுவந்து அடகு வைப்போரின் எண்ணிக்கையும் கூடிவருகிறது.
இந்த சூழலில் ஓராண்டு முடிந்து நகைகளைத் திருப்ப முடியாமல் தள்ளிப் போகும் காலத்துக்கு வட்டி விகிதம் மாறாது. ஏற்கெனவே இருக்கும் சதவீத அடிப்படையிலேயே வட்டி வசூலிக்கப்படும். அதேபோல் மக்களின் இப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு நகைக்கடன் திருப்புதலுக்கான தவணைத் தேதி முடிந்த அறிவிப்பும் வங்கிகள் தரப்பில் இருந்து அனுப்பமாட்டார்கள்.
அது கடன்பெற்ற மக்களை உளவியல் ரீதியாக நெருக்குதலுக்கு உள்ளாக்கும் என்பதால் வங்கித் தரப்பு, வாடிக்கையாளர் நகையைத் திருப்பாவிட்டாலும் நோட்டீஸ் அனுப்பாது. அதே வட்டியில் தொடரும் நகைக்கடனை அவர்கள் பணம் கிடைக்கும்போது திருப்பிக் கொள்ளலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT