Published : 29 Jun 2020 04:19 PM
Last Updated : 29 Jun 2020 04:19 PM
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மர்ம மரணத்துக்கு நீதிக் கேட்கும் வகையில், 'ஐஸ்டிஸ் பார் ஜெயராஜ் அன்ட் பென்னிக்ஸ்' என்ற வாசகம் கொண்ட முகக்கவசங்களை கனிமொழி எம்பி மற்றும் திமுகவினர் அணிந்துள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் மிகக் கொடூரமான முறையில் தாக்கியதால் தான் இறந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூகவளைத்தளங்களில் வேகமாக டிரெண்டிங் ஆகி வருகிறது.
குறிப்பாக 'ஜஸ்டிஸ் பார் ஜெயராஜ் அன்ட் பென்னிக்ஸ்' என்ற ஹேஸ்டேக் டூவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதில் தமிழ் மற்றும் இந்தி சினிமா பிரபலங்கள், இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 'ஐஸ்டிஸ் பார் ஜெயராஜ் அன்ட் பென்னிக்ஸ்' என்ற வாசகம் கொண்ட முகக்கவசத்தை அவர் அணிந்துள்ளார். இதேபோன்று தூத்துக்குடியில் இன்று திமுக நிர்வாகிகளுக்கும் அந்த முகக்கவசங்களை அவர் விநியோகித்தார்.
இதையடுத்து அவரது தலைமையில், தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் 'ஐஸ்டிஸ் பார் ஜெயராஜ் அன்ட் பென்னிக்ஸ்' என்ற வாசகம் கொண்ட முகக்கவசங்களை அணிந்து சாத்தான்குளம் வியாபாரிகள் மர்ம மரணத்துக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், சாத்தான்குளம் வியாபாரிகள் மர்ம மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு மீண்டும் தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் கனிமொழி தனது டூவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT