Published : 29 Jun 2020 03:26 PM
Last Updated : 29 Jun 2020 03:26 PM

தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது: திமுக வழக்கில் தமிழக அரசு விளக்கம்

சென்னை

தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை என மத்திய அரசும், அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளன.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில், தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 1,248 விமானங்கள் இயக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதில் ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக 661 விமானங்கள் மூலம் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 187 இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 17,707 தமிழர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து 587 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், “வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசு, விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ஹைதராபாத், பெங்களூருவில் இறங்கி தமிழகம் வருகின்றனர். விமானங்களைத் தரையிறக்க ஏன் அனுமதி மறுக்கிறது என தமிழக அரசுதான் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் எப்போது அழைத்து வரப்படுவார்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், “வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் தமிழகத்திற்குத் திரும்பியுள்ளனர். விமானங்கள் தரையிறங்க அனுமதியளித்தது குறித்து கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அவகாசம் வேண்டும்” எனக் கோரினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை (ஜூன் 30) தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x