Published : 29 Jun 2020 12:12 PM
Last Updated : 29 Jun 2020 12:12 PM
தமிழகத்தில் 5-வது கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் 7-வது முறையாக மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையைத் தொடங்கினார். இதில் தனிமைப்படுத்துதலில் இருந்த பிரதீப் கவுரும் கலந்துகொண்டார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அது தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. ஒவ்வொரு முறை ஊரடங்கு முடியும் முன்னர் ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் 7-வது முறையாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனையை நடத்தத் தொடங்கியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுருடன் 19 நிபுணர்கள், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் கடந்த 15 நாட்களில் தமிழக நிலைமை, பரிசோதனை, நோய்த்தொற்று தடுப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் அலசப்படும்.
தமிழகத்தில் சமீபகாலமாக மாவட்ட அளவில் தொற்று வேகமாகப் பரவி வருவதும், சென்னையில் அதிகரித்து வரும் தொற்று, ஜூன் மாதத்தில் அதிகரித்த மரண எண்ணிக்கை, ஊரடங்கில் தளர்வு, கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசப்படும் எனத் தெரிகிறது.
கடந்த 2 கூட்டங்களில் கலந்துகொள்ளாத ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். தங்கள் குழுவுடன் முக்கியத் தகவல்களை பகிர்வதில்லை என அவர் சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது பரபரப்பானது. இந்நிலையில் இன்று அவரும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT