Published : 28 Jun 2020 06:03 PM
Last Updated : 28 Jun 2020 06:03 PM

மதுரையில் உள்ளூர் அமைச்சர்கள் காலையில் ஒரு விழா; மாலையில் ஒரு விழா: ‘கரோனா’ தடுப்பு பணியை பார்க்க முடியாமல் நெருக்கடியில் அதிகாரிகள்

மதுரை

மதுரையில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் தினமும் ஏதாவது ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்வதால் அதில் அதிகாரிகள் பங்கேற்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், அதிகாரிகளால் மதுரையில் ‘கரோனா’ தடுப்பு பணிகளில் முழுகவனத்தையும் செலுத்த முடியவில்லை.

மதுரையில் கட்டுக்குள் இருந்த ‘கரோனா’ தொற்றுநோய் தற்போது கட்டுப்பாட்டை இழந்து சென்று கொண்டிருக்கிறது. ஒற்றை இலக்கத்தில் வந்த ‘கரோனா’ தொற்று பாதிப்பு மதுரையில் தற்போது தினமும் மூன்று இலக்கத்தில் வருகிறது. விழிப்புணர்வு, முககவசம் உள்ளிட்ட போன்றவற்றால் மதுரையில் ‘கரோனா’ தொற்று நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. ஊரடங்கு மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருந்ததால் தற்போது சென்னையை போல் மதுரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்பு நோய் தொற்று பாதிப்பு மட்டுமே அதிகமாக இருந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக நோயாளிகள் உயிரிழப்பும் தினமும் அதிகரிக்கிறது. ஒரு புறம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை காப்பாற்ற மருத்துவக்குழுவினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு புறம் இந்த தொற்று நோய் பரவாமல் தடுக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த தொற்று நோய்க்கு முன்னால் நின்று போராடும் களப்பணியாளர்கள் மட்டுமில்லாது அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிகாரிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மதுரையில் தினமும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் பங்கேற்கும் ‘கரோனா’ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருந்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சிகள், நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிகள், ஏதாவது ஒரு புதிய நிகழ்வு தொடக்க விழா என்று தினமும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. காலையில் ஒரு அமைச்சர் என்றால் மாலையில் மற்றோரு அமைச்சர் என்று போட்டிப்போட்டு ‘கரோனா’ வேகமாக பரவும் இந்த அசாதாரண சூழ்நிலையிலும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஒரு அமைச்சரின் நிகழ்ச்சிக்கு செல்லும் அதிகாரிகள், மற்றொரு அமைச்சர் நிகழ்ச்சிக்கும் செல்ல வேண்டிய கட்டாயமாகிறது. அப்படி செல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடைய நெருக்கடிகளுக்கு ஆளாகவேண்டிய இருக்கிறது. அதனால், அதிகாரிகள் அமைச்சர்கள் விழாக்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து பங்கேற்கின்றனர். அதன்பிறகே அன்றாட ‘கரோனா’ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஒரு அமைச்சர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது முதல் மறுநாள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது வரை அதிகாரிகள் ‘கரோனா’ தடுப்பு பணிகளுடன் அன்றாடும் இதற்கும் பல மணி நேரம் செலவு செய்ய வேண்டிய உள்ளது.

அமைச்சர்கள் வருவதால் அந்த நிகழ்ச்சிகளுக்கு அவரது ஆதரவு நிர்வாகிகள், கட்சிக்காரர்கள், அதிகாரிகள் என்று ஏராளமானோர் ஒரே இடத்தில் சமூக இடைவெளி இல்லாமல் கூடி விடுகின்றனர். இதற்கிடையில் முன்னாள் மேயரும், வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான விவி.ராஜன் செல்லப்பாவும், தன்னுடைய தொகுதியில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் அதில் கலந்து கொள்ள விரும்புகிறார். அவர்கள் வராவிட்டால் அவர்கள்(செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார்) அமைச்சர்களாக இருக்கலாம், நான் கட்சியில் சீனியர் என்று என்கிறாராம்.

‘கரோனா’ பரவலை தடுப்பதற்கு முதல் விழிப்புணர்வே சமூக இடைவெளியை கடைபிடிப்பதே. அதற்காகவே அரசு சமீப காலமாக புதிய திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சிகள், அத்தியாவசிய அரசு விழாக்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்துகிறது. ஆனால், மதுரையில் மட்டுமே அமைச்சர்கள் பங்கேற்கும் விழா முன்போல் எந்த தடையிலும் இல்லாமல் நடக்கிறது. ஆனால், காரணம் (கரோனா)மட்டுமே மாறியுள்ளது. சமூக இடைவெளியும் பின்பற்றப்படுவதில்லை. சென்னையில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் சிலரே இந்த நோய் பாதிக்கப்பட்னர். அதனால், உள்ளூர் அமைச்சர்கள் பாதுகாப்புடன் மக்கள் பணிகளில் ஈடுபட்டால் மட்டுமே மதுரையில் தோய்வில்லாமல் ‘கரோனா’ தடுப்பு பணிகளில் அதிகாரிகளை முடுக்கிவிட முடியும். தற்போது மதுரையில் சென்னைக்கு அடுத்து ‘கரோனா’ வேகமாக பரவுகிறது. அதனால், அமைச்சர்கள் நேரடி அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளை தவிர்த்து, அதிகாரிகள் மட்டத்திலான ஆய்வுக்கூட்டங்களை மட்டுமே நேரடியாக நடத்தி அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.

அப்போதுதான் அவர்களும் ‘கரோனா’ தடுப்பு பணிகளுக்கு முழு கவனமும், முக்கியத்துவமும் கொடுத்து பணிகளை மேற்கொள்ள முடியும். தங்களுக்கு கீழ் பணிபுரியும் பல்வேறு கட்ட அதிகாரிகள், களப்பணியாளர்கள் அன்றாடப்பணிகளை கண்காணிக்கவும் அவர்களால் முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x