Published : 28 Jun 2020 03:15 PM
Last Updated : 28 Jun 2020 03:15 PM
காவல்நிலையத்திலேயே நடந்தால் தான் அது லாக் அப் மரணமாகும் என எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
எட்டயபுரத்தில் போலீஸார் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்ட கணேசமூர்த்தியின் வீட்டுக்கு நேற்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்றார். அங்கு கணேசமூர்த்தியின் மனைவி ராமலட்சுமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், ராமலட்சுமிக்கு அரசு வேலை கிடைப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சின்னப்பன், காவல் துணை கண்காணிப்பாளர் பீர் முகைதீன், ஆய்வாளர் கலா மற்றும் அதிகாரிகள், அதிமுகவினர் உடனிருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கரோனா எவ்வளவு வேகமாக பரவுகிறதோ அதனை விட வேகமாக அரசு நடவடிக்கை எடுத்து தடுக்கின்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களை விட குணமடைந்து திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் வகையில் மின்னல் வேகத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.
ஈரான் நாட்டில் மீன் பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்கள் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வர உள்ளனர். அவர்களை பரிசோதித்து அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ரூ.60 மதிப்பிலான கரோனா பரிசோதனை ஆய்வகம் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காவல்நிலையத்தில் 2 பேர் லாக் அப் மரணம் ஏற்பட்டது. லாக் அப் மரணம் என்பது காவல்நிலையத்திலேயே தாக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்ததால் தான் அதற்கு லாப் மரணம் என்று பெயர். ஆனால் தற்போது நடந்த சம்பவம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, அங்கிருந்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு 2, 3 நாட்களுக்கு பின்னர் சம்பவம் நடந்துள்ளது. தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை அந்த வழக்கை தாமாக முன் வந்து எடுத்து, மாஜிஸ்திரேட் முன்னிலையில் 3-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வை செய்ய வேண்டும். அதனை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு உறுதுணையாக இருந்தது. உடற்கூறு ஆய்வு அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்.
இதனை கனிமொழி லாக் அப் மரணம் என கூறியுள்ளார். அரசியலுக்காக இதனை அவர் சொல்கிறார். எதிர்கட்சிகள் அப்படி செய்தாலும் மக்களுக்கு உண்மை தெரியும். அப்பகுதி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை மதித்து, சம்பந்தப்பட்ட காவலர்களை முதல்வர் பணியிடை நீக்கம் செய்தார். இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன் வந்து எடுத்துள்ள காரணத்தால் இனிமேல், உயர்நீதிமன்ற என்ன வழிமுறைகளை சொல்கிறதோ, என்ன தீர்ப்பு சொல்கிறதோ அதனை பின்பற்றி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT