Published : 07 Sep 2015 02:39 PM
Last Updated : 07 Sep 2015 02:39 PM

தருமபுரியில் கல்வி தரத்தை மேம்படுத்த அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

தருமபுரியில் கூடுதல் கல்வி மாவட்டம் உருவாக்கும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் இருப்பதால் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் முழுமையும் ஒரே கல்வி மாவட்டமாக தற்போது வரை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளின் எண்ணிக்கை, மாவட்ட பரப்பளவு, நிலவியல் அமைப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு பெரும்பாலான மாவட்டங்கள் 2 அல்லது 3 கல்வி மாவட்டங்களாக பிரித்து நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரிக்கு அருகில் உள்ள சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தலா 2 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக தருமபுரியில் இருந்து 2004-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதன்பிறகு நிர்வாக வசதிக்காக புதிதாக ஓசூர் கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், கிருஷ்ணகிரிக்கு தாய் மாவட்டமாக இருந்த தருமபுரி இன்றுவரை ஒரே கல்வி மாவட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிர்வாக சிக்கல் மட்டுமின்றி, கல்வித்தரத்தை உயர்த்துவதிலும் பல்வேறு நடைமுறை சிரமங்கள் உள்ளது.

எனவே நடப்பு கல்வி ஆண்டி லாவது, சிறந்த நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தருமபுரியில் கூடுதல் கல்வி மாவட்டம் ஒன்றை உருவாக்கித் தர வேண்டும் என கல்வியாளர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி கல்வியாளர்கள் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 287 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தின் மொத்த பரப்பு சுமார் 4497 சதுர கிலோ மீட்டர் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது. எனவே தான் அரூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு கல்வி மாவட்டத்தை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசிடம் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 வட்டங்களிலும் மலை கிராமங்கள் அதிகம் உள்ளன. அங்கெல்லாம் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு மாவட்ட கல்வி அலுவலர் முழு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு நடைமுறை சிரமங்கள் உள்ளது. இதில் ஏற்படும் பின்னடைவு கல்வித்தரத்தையும் சேர்த்தே பாதிக்கிறது.

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டங்களை உள்ளடக்கி அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை உருவாக்குவது மட்டுமே இதற்கு தீர்வு. இப்படி பிரிக்கப்படும் போது மாவட்டத்தின் மொத்த பள்ளிகளான 287-ல் புதிய கல்வி மாவட்ட எல்லையில் மட்டும் சுமார் 117 பள்ளிகள் இடம்பெறும். 470 வருவாய் கிராமங்களில் தருமபுரி கல்வி மாவட்டத்தில் 195-ம், புதிதாக பிரிக்கக் கோரும் அரூரில் 275-ம் என கிராமங்கள் பிரியும்.

இதன்மூலம், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியும் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பல்வேறு பணிகளுக்காக தருமபுரி வரை அலைவதும் முடிவுக்கு வரும். கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நோக்கில் நிறைவேற்றப்பட வேண்டிய நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி மாவட்ட கல்வி நிர்வாகத் தரப்பில் அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘கூடுதல் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டு அரசு பார்வைக்கு ஏற்கெனவே கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இனி அரசு தான் இதில் முடிவெடுக்க வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x