Published : 28 Jun 2020 02:35 PM
Last Updated : 28 Jun 2020 02:35 PM

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்- நீதி கிடைக்கும்: பாஜக நம்பிக்கை

எத்தனை நிதி உதவிகள் கிடைத்தாலும், ஜெயராஜ் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு ஈடு செய்ய முடியாததாகும் என தெரிவித்துள்ள பாஜக தலைவர் எல்.முருகன் இச்சம்பவத்திற்கு விரைவான நீதி கிடைத்திடும் வகையில் அக்குடும்பத்தினருக்கு பாஜக துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஜாதி, மத பாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி வருகிறார்கள்.

மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, இந்த வழக்கை விசாரிப்பதும், பிரேத பரிசோதனைகள் அதிகாரிகள் முன்பு பதிவு செய்யப்பட்டிருப்பதும், வழக்கு விசாரணையில் சாட்சிகளை விசாரிப்பது உட்பட அனைத்தையும் கோவில்பட்டி நீதிபதி முன்னின்று செய்திட உத்தரவிட்டிருப்பதும் மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.

இந்த மரணங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கோடிக்கணக்கான வணிகர்கள் மீதான காவல்துறையின் பார்வை இதில் அடங்கியிருக்கிறது. இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்தோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனாவால் நாடே பாதிக்கப்பட்டு அல்லலுற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களோடு இணைந்து காவல்துறையினரும் அரும்பாடு பட்டு பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துதல், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுதல் என பல்வேறு பணிகளை உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு மக்கள் மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கமாகும். நேர்மையான விசாரணை, குற்றவாளிகளுக்கு கிடைக்கும் உரிய தண்டனை இதன் மூலம் தான் இந்தக் களங்கம் துடைக்கப்படும்.

எத்தனை நிதி உதவிகள் கிடைத்தாலும், ஜெயராஜ் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். ஜெயராஜ் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்திற்கு விரைவான நீதி கிடைத்திடும் வகையில் அக்குடும்பத்தினருக்கு பாஜக துணை நிற்கும்”.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x