Published : 28 Jun 2020 11:41 AM
Last Updated : 28 Jun 2020 11:41 AM
கோவை உக்கடம் - செல்வபுரம் பைபாஸ் சாலையில், மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான சில்லறை மீன் மார்க்கெட் வளாகம் உள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. தினசரி ஏராளமான பொதுமக்கள், சிறு வியாபாரிகள் இந்த மார்க்கெட் வளாகத்துக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக கோவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கோவையில் 428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 240-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தொற்று உறுதிசெய்யப்படுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் மாநகராட்சிப் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்.
இதைத் தொடர்ந்து கரோனா தொற்று பரவலைத் தடுக்க இந்த மார்க்கெட் வளாகத்தில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. உள்ளே வரும் வாடிக்கையாளர்கள் வரிசையில் வர கம்பங்கள் மூலம் நடைபாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர, உள்ளே நுழையும் முன் கிருமிநாசினி மருந்து கைகளில் தெளிக்கப்பட்டு கை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தனிநபர் இடைவெளிகளை முறையாக கடைபிடித்து வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் உத்திரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சில்லறை மீன் மார்க்கெட் வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இன்று காலை ஆய்வு செய்தனர். வியாபாரிகள், பொதுமக்கள் முகக்கவசம் முறையாக அணிந்து உள்ளனரா, தனிநபர் இடைவெளியை முறையாக கடைபிடிக்கின்றனரா என்பது குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். தவிர, இன்று இந்த மீன் மார்க்கெட் வளாகத்துக்கு வரும் பொதுமக்கள், உள்ளே இருக்கும் வியாபாரிகளுக்கு கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,‘‘ இந்த மார்க்கெட்டுக்கு வழக்கமான நாட்களை விட, வார இறுதி நாட்களில் இரண்டு மடங்கு அளவுக்கு மக்கள் வந்து செல்கின்றனர். எனவே, இங்கு கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. தவிர, இங்கு கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனையும் இன்று விருப்பம் உள்ள மக்களுக்கு எடுக்கப்பட்டது. கரோனா நோய் தடுப்பு விதிகளை மீறுபவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்தல், சம்பந்தப்பட்ட இடங்கள் சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT